17 செப்டம்பர் 2017

வெந்தயக்குழம்பும் அம்மம்மாவும்

செவ்வாயும் வெள்ளியும் விரதம்!
மரக்கறிதான் சாப்பிடணும்,
சின்ன வெங்காயத்தை தோலுரித்து பொடியாக நறுக்கி கொஞ்சூண்டு தேங்காய்எண்ணெய் விட்டு வதக்கி வெந்தயம் தூவி புளிக்கரைசலைவும் கொச்சிக்காத்தூளுடன்   உப்பும் போட்டு ஒரு கிண்டு கிண்டி விடுவா.அம்மாடியோவ்.. இன்னும் கொஞ்சம் சோறு தா என நாலு தட்டு சோறு தின்னுவோம் வெந்தயக்குழம்பு அன்னிக்கு முழுக்க கையில் வாசனையோட இருக்கும்.
அப்படியே வேலி ஓரத்தில் நிற்கும் தூதுவளையில் இரண்டு கைப்பிடி பிடுங்கி சோத்துப்பானையில் கஞ்சி வடிச்சி அந்த சூடு சோத்துக்கு மேல் வாழையிலையை போட்டு அதுக்கு மேல் தூதுவளையையும் பச்சைமிளகாய் நாலையும் வைச்சு மூடி வைச்சிருவா. எரியும் விறகை அணைச்சி தணலில் வேக விட்டால் பத்து நிமிடத்தில் தூதுவளையை பச்சைமிளகாயுடன் சின்ன வெங்காயம் ஒரு பிடி தேங்காப்பூ வைச்சி அம்மியில் அரைச்செடுத்தால்....சுடச்சுட சோறும் தூதுவளை பச்சடியுமாய் அமர்க்களம் தான்.
அம்மம்மா கைச்சமையல் ஒருவிதம் என்றால் அம்மா சமையல் இன்னொரு விதம். எதை செய்தாலும் அன்பையும் அக்கறையையும் அள்ளி சமைப்பார்கள் என்பதனால் ருசியும் தனி.
சின்ன வெங்காயம் சின்ன சீரகம் தாளிச்சு தேங்காய்ப்பூ போட்டு அரைச்சி எடுக்கும் சட்னியும் தோசையும் எங்கம்மா சுட்டால் ஊருக்கே வாசனைவரும். அப்படி ஒரு ருசி எங்கேயும் சாப்பிட கிடைக்கவே இல்லை.
அப்பல்லாம் தூதுவளை பச்சடி,, கறிவேப்பிலை துளிரில் பச்சடி, முருங்கைக்கீரை துளிர் பச்சடி குறிஞ்சா கீரை சுண்டல், கானாந்தி முல்லை லெச்சகட்டை கீரைக்குள் புளி மாங்காயும் கீரி மீனும் போட்டு சொதி என எளிய உணவு தான், வீட்டு ஓரத்தில் வேலியில் வளரும் கீரைகளை கொண்டே சமைப்பார்கள்.
கெழுத்தி மீன் புளிமாங்காய் உப்பவியல்
கூனியும் புளிமாங்காயும் கடையல்
சள்ளல் மீன் மிளகு தண்ணீர்
ஆத்தில் பிடிக்கும் செல்வமீன் உப்பவியலோ பொரியலோ பசித்து ரசித்து ருசித்து  வசித்தோம். 

16 வயதில் சுவிஸுக்கு வந்து 13 வருடம் கழிச்சு 29வயதில் ஊருக்கு போய் ஊர் நினைவில் ஊர்ச்சாப்பாட்டை தேடினேன்.
எல்லாமே தொலைந்து போயிருந்தது. தொலைந்து தொலைவாய் நானும் போயிருந்தேன்.
எங்கே தேடியும் கிடைக்காத இனி என்றும் கிடைக்கவே கிடைக்காத பொக்கிசநினைவுகள் இனிமையானவை

14 கருத்துகள்:

  1. ஏம்பா சப்பாட்டு முறை கூடவா மாறிடும்?என்ன சோகம் பா இது. நீங்க விடாமல் பின் பற்றவும்..தாய் நாட்டு வாசனை தெரிந்தவர்கள் யாராவது கிடைக்கக் கூடும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதெல்லாம் மாறித்தான் விட்டதும்மா. நாங்கள் ஊர் வாசனையை விரும்பி தேடிப்போனால் அங்கே இருப்பவர்கள் எங்களுக்காக ஸ்பெஷலாக் சமைப்பதாக நினைத்து வெஸ்டன் உணவு விருந்து தான் தருவார்கள். அதையெல்லாம் விட இப்போவெல்லாம் யாருக்கும் உடம்பை வளைத்து அம்மியில் அரைத்து ஆட்டுரலில் உழுந்தரைத்து விறகடுப்பில் சோறு சமைத்து சாப்பிடும் இஷ்டம் இல்லையேம்மா.

      தாய் நாட்டு வாசனையான உணவென்பது மண்ணோடு கலந்ததல்லவா?தேடினால் கிடைக்குமா?

      நீக்கு
  2. நான் சிறுவயதில் அம்மாவிர்கு சமைக்க உதவியதால் என்னவோ அம்மா செய்த பல சமையல்கள் என் மனதில் அப்படியே பதிந்துவிட்டது. ஒரு சில உணவுகள் மட்டும் விட்டுப் போய்விட்டன்

    பதிலளிநீக்கு
  3. வல்லிம்மா கேட்டிருப்பதுபோல சாப்பாடு முறை கூடவா காணாமல் போயிவிடும்?

    எனக்கும் பாட்டியின் அதுவும் அம்மாவின் அம்மா ஒரு மாதிரி, அப்பாவின் அம்மா ஒரு மாதிரி கைப்பக்குவம் நினைவிருக்கிறது. அப்பாவின் அம்மா மாதத்துக்கு ஒருதரம் வேப்பிலையைக் கொழுந்தாகப் பறித்து அம்மியில் சில துணைப்பொருட்களுடன் வைத்து அரைத்து சிறு உருண்டைகளாக்கி எங்களைத் தேடும்போது நாங்கள் காணாமல்போயிருப்போம்! அதே சமயம் அம்மாவின் கைருசி தனி.

    பதிலளிநீக்கு
  4. பழைய நினைவுகள் பொக்கிஷமான நி்னைவுகளே...

    பதிலளிநீக்கு
  5. அதெல்லாம் அவர்களது காலத்துடன் முடிந்துவிட்டது. இப்போது நமது குழந்தைகள் நம்முடைய கைப்பக்குவத்தை மெச்சுகிறார்கள்...

    பதிலளிநீக்கு
  6. மணக்க மணக்க இருக்கு...ஒவ்வொன்னும்...

    இனிமையான நினைவுகள்....



    மாற்றம் தானே மாறாதது ...என்ன செய்வது..

    பதிலளிநீக்கு
  7. அம்மாவின் கைமணம் கொண்ட சமையல் இங்கயும் மாறிட்டுது நிஷாக்கா

    பதிலளிநீக்கு
  8. காலப்போக்கில் ஏற்படும் மாற்றங்கள் எதையும் விட்டு வைக்காது

    பதிலளிநீக்கு
  9. என் பாட்டிகள் இருவரின் கைப்பக்குவம், என் அம்மா மற்றும் மாமியாரின் கைப்பக்குவம், மற்றும் எங்கள் நெருங்கிய சில உறவினர்களின் அந்தக்காலக் கைப்பக்குவம் அதாவது அம்மியில் அரைப்பது, உரலில் அரைப்பது என்று என் மகன் வரை இன்றும் அவன் என்னிடம் கேட்பான்...நானும் செய்து கொடுத்ததுண்டு அவன் இங்கு இருக்கும்வரை...அந்தப் பக்குவத்திற்கு ஈடு இணை எதுவும் இல்லை...இல்லை இல்லை....ல்லை.....லை....எங்கள் வீட்டில் இப்போதும் முயற்சி செய்வதுண்டு. இதோ இப்போது நீங்கள் குறிப்பிட்டுள்ள தூதுவளை பச்சடி எல்லாம் குறித்துக் கொண்டுவிட்டேன்....

    கீதா

    பதிலளிநீக்கு
  10. இப்போ சமையல் அறையில் எல்லா வசதியும் வந்து விட்டது ,அன்றைய ருசிதான் வரமாட்டேங்குதே :)

    பதிலளிநீக்கு
  11. வணக்கம் !

    அடடா நம்ம சாப்பாடு எல்லாமே அப்படியே சாப்பிட்டு இருக்கீங்க போல இருக்கே நமக்கு அதெல்லாம் கிடைக்காமல் போய் பத்து வருடம் ஆகிறது பா ........

    அந்த உப்பவியல் இன்னும் நெஞ்சுக்குள்ளே இருக்கு ம்ம்ம் பார்க்கலாம் ஒருநாள்

    பகிர்விற்கு நன்றி நிஷா

    பதிலளிநீக்கு
  12. இன்னும் மறக்கமுடியாத சுவை இன்னும் அம்மா போல எவரும் பக்குவத்தில் பக்கத்தில் இல்லை!

    பதிலளிநீக்கு

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!