23 ஜூன் 2017

கறுப்பு மைப் பொட்டுக்காய்ச்சுவது எப்படி?

பேஸ்புக்கில் இணுவையூர் மயூரன் அவர்கள் பதிவில்  பொட்டுச்சிரட்டை  படம் இட்டிருந்தார். பொட்டுச்சிரட்டைகுறித்த பழைய நினைவுகளுடன் பொட்டுக்காய்ச்சுவது எப்படி என இணையத்தில் தேடினால் சரியாக தரவுகள் இல்லை என்பதனால் நாமாவது நமக்குத்தெரிந்ததை எழுதிப்பதிவாக்கி விடலாம்  என நினைத்து பொட்டுக்காய்ச்ச ஆரம்பித்து விட்டேன். 

புகைப்படம் நன்றி இணுவையூர் மயூரன் 

சிறுவயதில் எங்கள் வீட்டில்  அம்மா தேங்காய்ச்சிரட்டைகளில் பொட்டுக்காய்ச்சி ஊற்றி காயவைத்தும் வைப்பார். வருடக்கணக்கில் அந்த பொட்டுச்சிரட்டை பயன் படும். 

ஸ்டிக்கர் பொட்டு அதிகம் பாவனைக்கு வராத காலங்களிலும்  தினம் பள்ளி செல்லும் போது  சிரட்டையில் இருக்கும் மையை கொஞ்சம் தண்ணீர் தெளித்து தடவினால் கறுப்பு மையாக வரும். அதை  நெருப்புக்குச்சியின் குண்டு முனைப்பக்கமாக  ஒட்டி  நெற்றியில் நடுவில் மேலிருந்து கீழாக  ⧫  கோடு போட்டு கீழே அதே குச்சியின் முனை அளவு ஒரு டொட் வைப்போம். 

                                     
அதிலும் முக்கியமாக சின்னக்குழந்தைகளுக்கு  ஆணானாலும், பெண்ணானாலும்  மூன்று வயது வரையேனும்  நெற்றியில் பெரிதாகவும் கன்னத்தில் சிறிதாகவும் ஒரு பொட்டு வைத்து அழகு படுத்தி விடுவார்கள். எங்கள் வீட்டிலும் இதற்காகவே பொட்டுச்சிரட்டை காலியாகாமல் காய்ச்சப்பட்டு நிரப்பப்பட்டு கொண்டிருக்கும். கன்னத்தில் வைக்கும் குட்டி வட்டம் திருஷ்டிக்கானது என்பதும் நம்பிக்கை தான். 

படம் இணையத்திலிருந்து 

ஸ்டிக்கர் பொட்டு எனும் பெயரில் விதவிதமான வடிவங்களிலும்,வர்ணங்களிலும்  பொட்டுக்கள் வந்த பின்னும்  இந்த சிரட்டைப்பொட்டுக்கு மவுசு இருக்கத்தான் செய்தது.. கொஞ்சம் வளர்ந்த பின் சந்துப்போட்டெனும் பெயரில் குட்டி டப்பாவில் சிவப்புக்கலர் பொட்டு வாங்கித்தந்தார் அம்மா. அதை  நெற்றிக்கு வைத்ததை விட கைவிரல்களுக்கு கியூரெக்சாக  பூசியே சீக்கிரம் முடிந்து போகும், விரல்களுக்கு பூசப்பட்ட சாந்துபொட்டும் அடுத்த  ஒரு மணி நேரத்தில் பட்டை பட்டையாக கழண்டு உரிந்து விடும். அப்போதெல்லாம் எங்களுக்கு சிரட்டைப்பொட்டுத்தான் உதவும். 
                                                படம் இணையத்திலிருந்து 
அதே போல்   கைவிரல்கலுக்கு மருதோன்றி இலைகளை தேடி அரைத்து விரலில்  பத்து போட்டுக்கொண்டு விரல் சிவந்து விட்டதா என  போட்ட மருதோன்றி பத்தை  தூக்கி தூக்கி பார்த்து விரல்களை தவிர உள்ளைங்கையிலும்  அதிகம் சிவந்து  அழுகை அழுகையா வர வைக்கும். மருதோன்றி  இலைகளை  அம்மியில் அரைத்தால் அதற்கும் அடி விழும், பயந்து பயந்து ஒழித்து மறைத்து அரைத்து  விரலில் ஒட்டிக்கொண்டு அதையும் மறைந்து விடலாம் என நம்பிய  காலங்கள் அவை.  

அரிசிக்குறுனையில் தான் அப்போதெல்லாம்   பொட்டுக்காய்ச்சுவார்கள், இப்போது சவ்வரியிலும் காய்ச்சுகின்றார்கள். அரிசிக்குறுணையை விட சவ்வரிசி விலை அதிகம் என்பதனால் பெரும்பாலும் அரிசிக்குறுணை தான் பொட்டுக்காய்ச்ச பயன் படும். வசதி இருப்போர் சவ்வரிசியிலும் காய்ச்சலாம்.சவ்வரிசிப்பொட்டு சற்று அதிக பசைத்தன்மையோடிருக்கும்.

பொட்டுக்காய்ச்சுவது எப்படி?

ஒரு கைப்பிடி சவ்வ்ரிசி அல்லது அரிசிக்குறுணையை  மண் சட்டியில் (மண் சட்டி கிடைக்காவிட்டால் வாணலியில் காய்ச்சலாம்.)   போட்டு அடுப்பை பற்ற வைத்து நிதானமாக மிதமான சூட்டில் வறுக்கும் போது குறுணை  முதலில் வறுபட்டு   நிறம் மாறி  தொடர்ந்து வறுக்க கறுப்புக்கலராகி நல்ல மைக்கறுப்பாகும் போது  அப்படியே திரண்டு   ஒன்றோடொன்று ஒட்டிக்கொள்ளும் பதத்தில்  ஒரு கப் தண்ணீரை விட்டு  கொதிக்கும் வரை காய்ச்ச வேண்டும். இதனுடன் சிறிது பர்வ்யூம் சேர்த்தால் . பொட்டு வாசனையாக இருக்கும், செவ்வரத்தம் பூவின் சாறு அல்லது தேங்காய் எண்ணெய் கொஞ்சம் விட்டு காய்ச்சினால் பொட்டு பளபளவென  இருக்கும். நாங்கள்தேங்காய் எண்ணெய்  ஒரு துளி விட்டுக்காய்ச்சுவோம். 

பொட்டுக்காய்ச்ச முன் காய்ச்சிய மையை ஊற்ற  தேங்காய்ச்சிரட்டையை இருபக்கமும் நல்லா வளவளப்பாக  பளீச் என சீவி தயார் செய்து கொள்வது முக்கியம். பொட்டுக்காய்ச்சியதும் அதை சிறு துணியினால் வடிகட்டி எடுத்தால்  சகடுகள் எல்லாம் தனியாகி  திக்காக இருக்கும்   மையை அதற்கென தயாராக இருக்கும் சிரட்டையில்    ஆப்பச்சட்டியில் மா ஊற்றி சுழட்டுவது போல் சிரட்டைக்குள் சுழற்றினால்    சிரட்டையில் பரவலாக ஒட்டும். எனினும் சிறிது நேரத்தில் கீழே வடிந்து நடுவில் சேரும். கவலை வேண்டாம். அப்படியே ஆற விட வேண்டும்.. பொட்டுக்காய்ச்சி ஆறவைத்து பதப்படுத்தும் பணி ஒரு நாளில் முடியாது என்பதை புரிந்து  பொறுமையாக 
காய்ச்சிய மையை  சிரட்டையில் ஊற்றி சுழட்டி  ஒரிடத்தில் அசைக்காமல் காய விட வேண்டும். இரண்டாம் மூன்றாம் நாளில்     மை சிரட்டையின் நடுவில்  தேங்கி  மேலே  பாலாடைபோல் படர்ந்து இருக்கும் அதை உடைத்து மீண்டும்   சில தடவை  சிரட்டைக்குள் பரவலாக படும்படி சுத்தி  காய வைக்க வேண்டும். இப்படி முழு மையும்,  சிரட்டையில் பரவலாக சம நிலைக்கு வரும் வரை  சிரட்டையை சுழற்றி காய விட்டால்  ஒரு வாரத்தில் மை இறுகி பொட்டுப்பதத்தில் வந்து விடும். 

அதில் ஒரு துளி நீர் விட்டு குழைந்தால் பொட்டு தயார். கடைகளில் வாங்கிப்பயன் படுத்தும் பொட்டுக்களில் இரசாயனங்களை சேர்த்து தோலுக்கு ஒவ்வாமை வரலாம். ஆனால் வீட்டில் இவ்வாறு காய்ச்சி பதப்படுத்தி பயன் படுத்தினால் வருடக்கணக்கில் அந்த பொட்டுச்சிரட்டை  குறைந்த செலவில் ஆரோக்கியமானதாகவும் நீண்டகால பயனுடனும் இருக்கும், 

13 கருத்துகள்:

  1. வணக்கம்

    இரசாயனக்கலவை இல்லாத பொட்டு நமது வீட்டில் தயாரிப்பதுதான் நல்ல விளக்கம் கொடுத்துள்ளீர்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ரூப்ன்.உங்கள் பகுதிகளில் இப்படிப்பயன் பாடு இல்லையா?

      நீக்கு
  2. பலருக்கும் பயனுள்ள தகவல்தான் இருப்பினும் இன்றைய அவசர வாழ்வில் இதையெல்லாம் மக்கள் செய்ய நேரமில்லை கடையில் வாங்கி ஒட்டி விட்டு பறக்கிறார்கள்
    த.ம.1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். உண்மை தான். ஆனால் சிறுகுழந்தைகளுக்கு கடைகளில் வாங்கும் பொட்டு ஒவ்வாமை தரும் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். இப்போது இந்த பொட்டுச்சிரட்டை கடைகளிலும் விற்பனைக்கு வருகின்றது என நினைக்கின்றேன்

      நீக்கு
  3. பயனுள்ள பகிர்வு...

    பார்ரா...! தமிழ்மணம் ஓட்டுப்பட்டை...!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் தானே செட்டிங்க செய்து கொடுத்தீர்கள் தனபாலன் சார். நீங்கள் இணைக்கவில்லையா? நீங்கள் செட்டிங்க செய்ததுக்கும் ஒரு பதிவு போட வேண்டும் என நினைத்தேன். வேலைச்சூழலால் தவறி விட்டது சார்.

      நீக்கு
  4. எங்கள் ஊரில் நந்தியாவட்டப்பூ/மல்லிகைப்பூவும் சேர்ப்போம் எது உடனே கிடைக்குதோ அதுவே முதலிடம் அப்போது போல இப்போது யார் காய்ச்சுகின்றார்கள்))) இங்கும் சிரட்டையில் பொட்டு வருகின்றது வாங்கியிருக்கின்றேன் மகனுக்கு வைக்க))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்ல நேசன். மல்லிகைப்பூ ஜாஸ்மின் பர்வ்யூம் வாசனை தரும் தானே? சின்ன வயதில் பொட்டுச்சிரட்டைரை உரஞ்சி உரஞ்சி விரலெல்லாம் கறுப்பு மையுடன் ஸ்கூல் யூனிவோமிலும் தெறிக்க அம்மாவிடம் அடி வாங்கிக்கட்டிக்கொள்வதும் உண்டு. உண்மையில் அதிக செலவில்லாமல் செய்யக்கூடியதை நாங்கள் அதிக விலை கொடுத்து கடைகளில் வாங்குகின்றோம். நான் இந்த விடயஃத்தில் சோம்பல் படுவதில்லையப்பா. நேரம் கிடைக்கும் போது வீட்டில் தயார் செய்து விடுவேன்.

      நீக்கு
  5. படம் ,என் சின்ன வயது போட்டோ போலிருக்கே :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓஹோ உங்களுக்கு இப்ப நிரம்ப வயதாகி விட்டதென ஒப்புக்கொண்டதற்கு நன்றி ஜீ

      நீக்கு
  6. எங்கள் வீட்டிலும் கருப்புச் சாந்து என்று சொல்லி இதனைத் தயாரிப்பார்கள் நான் சிறுமியாக இருந்த போது. கண்ணிற்கு மையும் தயாரிப்பார்கள் விளக்கெண்ணை எல்லாம் விட்டு..நினைவுகளை எழுப்பிய பதிவு நிஷா

    கீதா

    பதிலளிநீக்கு

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!