23 டிசம்பர் 2017

பக்தி


பக்தி முத்தி சக்தியே சரணமென்பார்
சித்தி பெறவே சுத்தி வந்தேனென்பார் 
முக்தியைத்தேடி புத்தியைத்தொலைப்பார்
நித்திய வாழ்வே நிரந்தரமென்பார் 
சித்தம் கலக்கிட பித்தனாயலைவார்! 
கொத்திடும் காக்கைக்குணத்தினை மறைப்பார் 
வித்தைகள் காட்டி வியக்கவும் வைப்பார் 
உத்திகள் செய்தே யெம்மை அசைப்பார்
பக்தியின்றியே பக்தன் போலலைவார் 
சித்தன் நானென்றே ஏத்தி வைப்பார் 
எத்தனுக்கெத்தன் உண்டென உணர்ந்தே
பக்தனே நீயுன் புத்தியை தீட்டு! 😍


30 அக்டோபர் 2017

எங்கள் நிறுவன வளர்ச்சியில் சுவிஸ் மண்ணின் மைந்தர்கள்.

புலம்பெயர்ந்து தன் நாட்டுக்கு வருவோரை இருகரம் அணைத்து வரவேற்றாலும் அன்னியர் தங்களை விட வசதி வாய்ப்பில் , பதவியில் வளர்வதை சற்றுப்பொறாமையோடு நோக்கும் குணம் சுவிஸ் மக்களிடமும் உண்டு. அதிலும் வயதில் மூத்தவர்களிடம் தங்கள் நாட்டின் வளம் குறைக்க, வந்த பாதகர்கள் என்பதான எண்ணமும் இங்குண்டு.
சிலர் இதற்கு விதிவிலக்காக இருந்தாலும் பல முதியோர் புலம்பெயர்ந்து நிறம் குறைந்தோரை ஒரு படி கீழிறக்கியே வைத்திருப்பார்கள்.
ஆனாலும் எங்கள் Hegas Catering Services ஆரம்ப காலம் முதல் சுவிஸ் மண்ணின் மைந்தர்கள் ஆதரவோடும், பல முன்னனி நிறுவனங்களின் நல்லாசிகளோடும் தான் வளர்ந்து கொண்டிருக்கின்றது.
2011 ஆம் ஆண்டில் Annamaria அவர்களின் 99 ஆவதும் அவர் மகளின் 77 ஆவதுமான பிறந்த நாளை எங்கள் நிர்வாகத்தின் ஒழுங்கமைப்பில் இந்திய இலங்கை சுவிஸ் உணவுகளினை சுவைத்து மகிழ்ந்து சுவிஸ்மக்களையும் கவர்ந்திழுக்க முடியும் எனும் நம்பிக்கையை கொடுத்து எங்கள் வளர்ச்சிக்கு ஆரம்ப வித்தினை இட்டார்கள்.
அதன் பின் பல சுவிஸ் மக்கள் தங்கள் 40. 50. 65. 70 . 75. 85 என கொண்டாடிக்கொண்டிருக்கின்றார்கள்.
கடந்த வாரம் Zimmermann , Unterseen அவர்களின் வீடு கட்டி எண்பதாவது ஆண்டு நிறைவை குடும்பத்தினர் அனைவரோடும் எங்கள் உணவகத்தில் வந்து கொண்டாடினார்கள் என்பதுடன் அவர் மனைவி லில்லியின் 85 ஆவது பிறந்த நாளையும் எங்கள் விழா மண்டபத்தில் தான் குடும்ப அங்கத்தவரோடு விருந்துண்டு கொண்டாடினார்கள்.
நிறுவன வளர்ச்சியில் இந்த நாட்டு மண்ணின் மைந்தர்களாம் மூத்தோரின் ஆதரவை பெறுவதும் அவர்கள் நல்மதிப்பை தொடர்ந்தும் தக்க வைத்திருப்பதும் புலம்பெயர்வாழ் மக்களுக்கு கடினமான காரியம் தான் என்றாலும் நாங்கள் இளையோரை மட்டுமல்ல மூத்தோரையும் தொடர் வாடிக்கையாளர்களாக கொண்டிருப்பதை நினைத்து பெருமிதம் அடைகின்றோம்.
பொதுவாக சுவிஸ் மக்களுக்கான விருந்தின் இறுதியில் எங்களை பாராட்டி, அறிமுகம் தந்து கரங்களை தட்டி கனப்படுத்துவார்கள். நேற்றைய நாளில் விருந்தின் முடிவில் எமக்காக இலங்கையிலிருந்து பிரபல்யமான் டிலான் அவர்களின் சிங்கள பாடல் ஒன்றை ஒலிக்க வைத்து எம்மை வரவேற்று கைகளை தட்டி ஆரவாரித்து கௌரவப்படுத்தியதை மறக்க முடியாது.
Andreaskapelle Ex Paster Schack Siegfried 
Pfingstgemeinde Thun அவர்களின் 75 ஆவது பிறந்த நாள் விழா 28.10.2017 எங்கள் விழா மண்டபத்தில் கொண்டாட்டத்தின் இறுதியில் டெசட் பவ்வே ஆரம்பமான போது தான் புகைப்படம் எடுகக் வேண்டும் என நினைவில் வந்தது.

வெல்கம் குடிபானங்கள். சிற்றுண்டிகள் மற்றும் மெயின் கோர்ஸ் அனைத்தும் பவ்வே முறையில் ஒழுங்கு செய்திருந்தும் அவைகளை புகைப்படம் எடுக்க மறந்து போனேன்.
ஒரே நாளின் நான்கைந்து கேட்டரிங்க் ஆர்டர்களுக்குரிய உணவுகளை தயார் செய்து அனுப்ப வேண்டிய சூழலில் இப்போதெல்லாம் நிகழ்வுகளை புகைப்படமாக்கவோ விடியோவில் பதியவோ நேரம் செலவிட முடிவதில்லை.





வீடியோவை பார்க்கவும் புகைப்படங்களை ரசிக்கவும் இங்கே செல்லுங்கள்.
என் பேஸ்புக்   Nishanthi Prabakaran

என் நிறுவன லைக் பேஜ்   hegas Catering Services
இப்பதிவினை படிக்கும் எம்மவர்கள் எங்கள் உணவின் தரம் சுவை மற்றும் அலங்காரம் போன்றவை குறித்த கருத்தினையும்,  உங்கள்  ரெவ்யுவினையும் லைக் பேஜ்ஜில் இட முடிந்தால் எமக்கு அதுவும் விளம்பரமாக இருக்கும். 

அன்புக்கும் ஒத்துழைப்புக்கும் நன்றி. 

23 அக்டோபர் 2017

இந்த சீதைகள் நிருபித்தது


விம்மித்துடிக்காமல் ஓடி ஒளியாமல்
கண் முன் எரிகின்றாள் - அவள்
நீதியை எரிக்கின்றாள்.
அநீதிக்கு துணை போகும்
அக்கிரமக்காருக்கே
அகிலத்தில் இடமுண்டாம்
அவள் சொல்லிச்செல்கின்றாள்.
பச்சிளம் குழந்தை அது.
கத்திக்கதறவில்லை
பற்றும் தேடவில்லை
தென்றலாய் வருடுவதாய்
எரி தணலை எதிர்வு கொண்டே
நிமிர்ந்தே நிற்கும் அவள்
திட மனதை என்ன சொல்வேன்!!!!!
சட்டி பானையெல்லாம் விற்றும்
வட்டி குட்டி போட
இரத்தப்பசியில் பலிவாங்க
பிணம் தின்னும் கழுகுகளாய்
கொத்திக்குதறத் துரத்த
பசுவும் கன்றுமாக கதறித்துடித்து
நிதம் பதறும் நிலை காண மறுத்து
நெருப்பில் பொசுங்கிடுமுன்
தட்டிய கதவுகளை மூடியே வைத்திருங்கள்.
பாவி அவனென்று சாபம் கொடுத்திடுங்கள்
எத்துணை திடமிருந்தால்
நிமிர்ந்தே நின்றிருப்பாள்?
அத்துணை யாருமின்றி
எதிலியாய் பொசுங்கி
எரிந்து கரிந்து சரிந்தது
அவளுடல் மட்டுமா?
தன்னை நிருபிக்க இராமனின் சீதை தீக்குளித்தாள்
இந்த சீதைகள் நிருபித்தது தேசத்தின் அவமானம்.

படம் இணையத்தில் இருந்து 

28 செப்டம்பர் 2017

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கு

புங்குடுதீவு வித்யா!
இனிய கனவுகளோடு பட்டாம்பூச்சியாய் சிறகடித்து பறந்து திரிந்த இளம் மாணவியின் சிறகொடித்து உயிர் குடித்தவர்களுக்கான தீர்ப்பு இன்று!
டெல்லி நிர்ப்பயா வழக்கில் கூட பல காரணங்கள் சொல்லி குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டும் தாமதம் செய்யப்படும் இந்த சூழலில் இலங்கையில் நடைபெற்ற மிகக்கொடூரமான கற்பழிப்பு வழக்கொன்றிற்கான தீர்ப்பு வரவேற்கப்படத்தக்கது, பாராட்டப்படத்தக்கதுமானது .
காலையில் பள்ளிக்கு சென்ற பெண்ணைக்கடத்தி கதறக்கதற சித்திரவதைப்படுத்தி கூட்டுவன்புணர்வு செய்து கொலையும் செய்தமை நிருபிக்கப்பட்ட பின்னும் நீதியின் தராசு தாழ்ந்தும் உயர்ந்தும் பணங்காசுக்கு விலை போக நிர்ப்பந்திக்கப்ப்ட்டும் பலவாறு விமர்சிக்கப்பட்டாலும் இன்றைய தினத்தின் இத்தீர்ப்பு இம்மாதிரி துஷ்டர்களுக்கு கடிவாளம் போடுமா?
நீதிபதி இளஞ்செழியன் தலைமையில் மேல் நீதிமன்ற நீதிபதிகளான பாலேந்திரன் சசிமகேந்திரன், மாணிக்கவாசகர் மற்றும் அன்னலிங்கம் பிரேம்சங்கர் ஆகியோர் அடங்கிய குழு வழங்கிய இத்தீர்ப்புக்கான செயல் திட்டம் எப்படி இருக்கும்?
வித்யா கொலையில் ஒன்பது பேர் மீது வழக்குத்தொடரப்பட்ட நிலையில்ஒன்பது பேரில் ஏழுபேர் குற்றவாளிகள் என நிருபிக்கப்பட்டும் முதல் குற்றவாளியாக விசாரிக்கப்பட்டவர் தகுந்த சாட்சியங்கள் இல்லாமையினால் விடுவிக்கப்பட்டிருக்கின்றார்???
ஏழாம் குற்றவாளியும் விடுவிக்கப்பட்டிருக்கின்றார்?
காதலுக்கு தூது போனதாகவும், நேரடி சாட்சியங்களால் நிருபிக்கப்படவில்லை என இவ்விருவர் விடுதலைக்குமான காரணம் சொல்லப்பட்டிருக்கின்றது. மீதி ஏழு பேருக்கும் மரண தண்டனையும் விதிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றது..
தீர்ப்பு மேல்முறையீட்டுக்கு செல்லுமானால் சிங்கள நீதிபதிகளால் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக்கப்படும் வாய்ப்பும் உள்ளது. காலத்தின் கோலத்தால் விடுதலையும் செய்யப்படலாம்.
உடனடி தண்டனை என்பதை தவிர இம்மாதிரி சம்பவங்களுக்கான நீதி விசாரனை என்பது காலந்தாழ்த்துதலுக்கும், மறக்கடிக்கப்பட்டு ச்ம்பவங்கள் பத்தோடு பதினொன்றாகி விடுதலுக்கும் தான் இதுவரை பயன் பட்டிருக்கின்றது. வித்யாவுக்கான இத்தீர்ப்பு நடுக்காட்டில் திக்கு திசை தெரியாமல் தடுமாறும் எம்மின மக்களுக்கான ஒளியை நோக்கிய வழிகாட்டும் தீபமாய் உணரப்படலாம். எனினும் தமக்கான நீதி தாமதமானாலும் தரமிழக்காது கிடைக்கும் எனும் நம்பிக்கையை தரும் படி இத்தீர்ப்பு இருக்குமா?
வித்யாவுக்கு பின்னும் இலங்கையில் பல கற்பழிப்புக்கொலைகள் நடந்தப்பட்டிருக்கின்றன. அதற்கான தீர்வுகள் எப்படி நகர்கின்றன?

என் கேள்வி?
இலங்கையில் மரண தண்டனை சட்டம் இன்னும் நிலுவையில் உள்ளதா?
பதிலும் நானே!
தூக்குத்தண்டனை இல்லை. தூக்குத்தண்டனை ரத்து செய்யப்பட்ட நாடுகளில் இலங்கையும் ஒன்றென நினைக்கின்றேன். எங்கோ படித்த நினைவு. மரண தண்டனை வேறு வகையில் இருக்கலாம். ஆனால் என்னைப்பொறுத்த வரை இன்றைய நிலையில் ஈழத்தமிழர்கள் விடயத்தில் இந்த தீர்ப்பு நல்லதொரு விடியல் எனும் நம்பிக்கை தரலாம். ஆனா’லும் நேற்றைய தீலிபனின் நினைவு கூரல் எந்த ஆண்டும் போலல்லாது இவ்வாண்டு சற்று உணர்வு வேகமாய் அனுஷ்டிக்கப்ப்ட்டதன் திசை திருப்பலாகவும் இத்தீர்வு இருக்கலாம். இப்போதெல்லாம் எது நடந்தாலும் அதன் பின் நாம் அறியாத இன்னொன்று உள்ளதே?


தீர்ப்பு குறித்து விபரம் அறிய
http://www.athirady.com/tamil-news/howisthis/1065355.html

24 செப்டம்பர் 2017

பூவோடு சேர்ந்து நாரும்.... இந்தப்பூக்கள் பறிப்பதற்கல்ல!.

17.09.2017 ஞாயிறு நடைபெற்ற பிறந்த நாள் பார்ட்டியில் எங்கள் Hegas Catering Services மூலம் மதிய உணவை ஆர்டர் செய்து எங்கள் உணவின் சுவைக்கும் சேவைக்குமாய் நாங்கள் எதிர்பாராத surprise gift பத்து பிராங்க நோட்டுக்களால் பூத்துக்குலுங்கும் அழகு மரத்தினை தயாரித்து    திக்குமுக்காட வைத்து விட்டார்கள்.  நீண்ட கால வாடிக்கையாளர்களான அவர்களின் அன்புப்பரிசு   எனக்குள் மிகப்பெரிய உற்சாகத்தினை தந்திருந்தது.  டிப்ஸ் என்பது எங்களுக்கு புதிதில்லை தான் எனினும்  எங்களுக்காகவே நேரம் எடுத்து பூ மரக்கன்றை வாங்கி  பத்து பிராங்க நோட்டுக்களையும் அழகாக மடித்து அலங்கரித்து அதை மரத்தின் குட்டிக்கிளைகள் உடையாதவாறு கட்டி எங்கள் வீடு தேடி வந்தமை தான் விஷேசமானது அல்லவா? பூத்திருக்கும் காசு மரத்த்ல் 16 நோட்டுக்கள் இருக்கின்றன. 

யாரும் பறித்து விடாதீர்கள். இந்தப்பூக்கள் பறிப்பதற்கல்ல

 

*********** 
தண்ணீருக்குத்தனி இயல்பு உண்டு என்றாலும் கூட அது சார்ந்து நிற்கும் தன்மைக்கு ஏற்ப தனை மாற்றிக்கொள்ளும் இயல்பும் கொண்டது. அது போலவே தான் மனிதர்களும் தனக்கென தனி இயல்பு இருந்தாலும் சேர்பவர்கள் எப்படிப்பட்டவர்களாக இருப்பார்களோ அப்படிப்பட்டவர்களாகவே ஆகுவதும் உண்டு.
சீர் அழிவதும், சீர் பெறுவதும் நம் சேர்க்கையை வைத்து என்பதைத்தான் நீ உன் நண்பனைச்சொல், நான் உன்னைப்பற்றி சொல்கின்றேன் என சொல்வார்கள். ஒருவர் எப்படிப்பட்டவர் என்பதை அவர் சேரும் நட்புக்களை கொண்டு அவரின் குணாதிசயங்களை புரிந்திட முடியும் என்பார்கள்.
புலம் பெயர்ந்து தாய் நாட்டை விட்டு அன்னிய நாட்டுக்குள் புகுந்து புகுந்த நாட்டின் மொழியும் சூழலும் புரியாமல் தடுமாறும் எங்கள் இளையோருக்கும் இது நன்கு பொருந்தும். அவர்கள் சேரும் இடம் சரியாக இருந்தால் அவர்கள் வாழ்க்கை வளமானதாயும் தீயர்களோடு சேரும் போது தீய வழியிலும் சென்று தங்கள் வாழ்க்கையை கெடுத்தும் குட்டிச்சுவரும் ஆக்கிக்கொள்வர்.
பூவோடு சேர்ந்து நாரும் மணக்கும் என்பார்கள். நல்லவர்களுடன் பழகினால் பூவோடு சேர்ந்த நாரும் மணப்பது போல நாமும் நன்மை அடையலாம். நல்லதை தேர்ந்தெடுப்பது மட்டுமல்ல நல்லவர்களை கண்டடைவதும் முக்கியம்.
சுய நலத்துக்காகவேனும் தீமை என்றறிந்தபின் தீயவைகளை விட்டு விலகி வாழ்வது உங்களுக்கும் உங்களை சார்த்தோருக்கும் என்றும் நன்மை தருவதே!
கடந்த பத்தாண்டு வியாபார அனுபவத்தில் கிட்டத்தட்ட 100 க்கும் அதிகமான இளையோருக்கு ஆரம்ப நிலை வேலை கற்பித்து.. இங்கே இருக்கும் சூழலுக்கு ஏற்ப ஏதேனும் உணவு விடுதியில், ஹோட்டலில், என வேலைகளை எடுத்தும் கொடுத்திருக்கின்றோம். அவர்கள் உயர்வில் மகிழ்ந்திருக்கின்றோம். உயர வேண்டும் என ஆலோசனை நல்கி இருக்கின்றோம்.
எங்கேனும் எங்களை சந்திக்கும் போதும் அக்கா நல்லா இருக்கின்றேன் என சொல்லும் போது ஈன்றபொழுதிற்பெரிதுவர்க்கும் அன்னையாய் மனம் நிறைவு கொள்ளத்தான் செய்கின்றது. அப்படியும் எவரேனும் பாதை மாறி கஷ்டப்படுகின்றார்கள் என அறியும் போது மனம் வருந்துகின்றது.
சில பல நேரங்களில் வேலைச்சூழலுக்கு ஏற்ப மிகவும் கடினமாக கோப முகம் காட்டினாலும் அந்த க்கோபத்தின் பின்னிருக்கும் அன்பையும் அக்கறையையும் என் தம்பிகள் ஒவ்வொருவரும் புரிந்தே இருப்பர். முன் விட்டு பின் பேசும் இயல்பு என்னிடம் இல்லாததனால் பலரிடமிருந்தும் தூரமாய் இருந்தாலும் எமை நாடி வரும் இளையோர் நல்வழி காட்டப்பட வேண்டும் எனபது மட்டுமே இன்று வரை எமது குறிக்கோளாய் இருந்திருக்கின்றது. இனியும் இருக்கும்.

நிலையானதென
நினைப்பவைகள் 
தொலைவாகும் 
தொடுவானம் விலை போக
நினைவுகள் வலியாகும்
முகநூல் நட்பே முதலானதாய்
விஷவார்த்தைகள் வசமாகிடும் 
அகமனதோ தரிசாகிட

நுகம் பூட்டி நாம் தொலைந்தே போவோம். 
*****************

18 செப்டம்பர் 2017

குறிஞ்சா இலைச்சுண்டலை அறிஞ்சோமா!?



கொடிவகை பெருங்குறிஞ்சா இலைகள்

சிறு குறிஞ்சா,பெருங்குறிஞ்சா என இருவகை இலைகளில் சிறு குறிஞ்சா இலைகள் வெற்றிலை போல இருக்கும். செடி வகைத்தாவரம். Gymnema sylvestre என்றழைக்கப்படும் .சிறுகுறிஞ்சா இலைகள் குடலை சுத்தப்படுத்தும் தன்மை வாய்ந்ததாகவும் நீரழிவு நோயாளர்களை இன்சுலின் எடுப்பதை தவிர்க்க செய்வது என்பதும் அறிவியல் ரிதியில் இன்னும் நிருபிக்கப்படா விட்டாலும் அனுபவத்தில் நீரழிவு நோயாளர்களுக்கு அரு மருந்து என்பதில் ஐயமே இல்லை என்பேன்.

Dregea volubilis எனும் பெயரில் இருக்கும் பெருங்குறிஞ்சா இலை கசப்பாக இருக்கும் இந்த இலை மூலிகைத்தன்மை வாய்ந்தது. இதன் கசப்பும் நீரழிவு நோயாளர்களுக்கு நல்லதென்பர்.


செடிவகை சிறு குறிஞ்சா இலைகள்

இவ்விலைகள் குறித்து தகவல்களை விக்கிமீடியாவிலும் இன்னும் தொகுக்கப்படவில்லை. யார் வேண்டுமானாலும் தொகுக்கலாம், திருத்தலாம் எனும் விதிமுறை விக்கிமீடியா தளத்தின் மீதான நம்பிக்கையை பொய்த்து போக செய்கின்றது. என்றாலும் இயலும் போது இயலுமானோர் அத்தளத்தின் தகவல்கல் பூர்த்தியாக்கப்படுமானால் எதிர்கால சந்ததிகளுக்கு பயன் தருவதாய் இருக்கும்.

சிறு குறிஞ்சா தென்,மத்திய இந்தியா மற்றும் இலங்கையின் வெப்பமண்டலக் காடுகளில்வளரும். இச்செடி தென் இந்தியாவில் அதிகமாக விளைவிக்கப்பட்டு இன்சுலின் தயாரிப்புக்கும் இன்னபிற மருத்துவத்துக்காகவும் மேலை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றது.

சுவிஸுக்கும் ஏற்றுமதியாகும் இலைகளில் இவ்விலைகளும் இருக்கின்றது. இங்கே எம்மவர் வீட்டுச்சமையலில் குறிஞ்சா இலைக்கும் பங்குண்டு.



                                       பெருங்குறிஞ்சா கொடி இலையின் காய்கள்
பெருங்குறிஞ்சா இலைகளின் காய் முற்றி வெடித்து சிதறுவதனால் காற்றின் மூலம் விதைகள் தானாகவே நிலத்தில் விழுந்து முளைக்கும் தாவரமாகும்.. தடித்த வலிமையான இலைகளோடுவேலியிலோ, முருங்கை போன்ற கிளைகள் கொண்ட பெரிய மரங்களிலோ பந்தல் இட்டோ வளரும் கொடி வகை தாவரம். இது.
                                       
படர்ந்திருக்கும் கொடி இலைகள்
கொடியில் படரும் பெருங்குறிஞ்சா இலைகளை ஒவ்வொரு இலையாக பறித்து , அதன் காம்பை கிள்ளி தண்ணீர் விட்டு கழுவி, தண்ணீர் இல்லாமல் துடைத்து பத்து பதினைந்து இலைகளை ஒன்றின் மேல் ஒன்றை வைத்து அடுக்கி சுருட்டு போல் சுருட்டி நடுவில் பாதியாக்கி இடது கையில் பிடித்து கொண்டு வலது கையில் கூரான் பிளேட்டினால் அல்லது சின்ன கத்தியால் மிக மெல்லியதாக சீவி எடுப்பார் அம்மா. அப்போதெல்லாம் எங்கள் ஊரில் வாரத்துக்கு ஒரு தடவையேனும் குறிஞ்சா இலை சுண்டல் எனும் பொரியல் இருக்கும்,

குறிஞ்சா கீரை சுண்டலின் விஷேசமே அந்த கீரையை நாங்கள் மிக மெல்லியதாக அரிந்து எடுப்பதில் தான் இருக்கின்றது. சிலர் காய்கள் கட் செய்யும் பலகையில் வைத்தும் அரிவார்கள். ஆனால் எங்கம்மா, பக்கத்து வீட்டு அக்காக்கள், ஏன் என் தங்கைகள், தங்கை மாமியார் எல்லாம் இப்படி இடது கட்டைவிரல் சுட்டுவிரல் பிடிக்குள் பிடித்துக் கொண்டு வலது கையால் வெட்டும் வேகம் பார்த்து அதிசயித்திருக்கின்றேன்.

எனக்கு குறிஞ்சா கீரை சாப்பிட நிரம்பவே பிடிக்கும், சுடச்சுட சோறும், இந்த கீரை சுண்டலும் ஏதேனும் மீன் பொரியலும் சின்ன வெங்காயம் பச்சையாக இரண்டும் கிடைத்தால் போதும். வேறு கறியோ கூட்டோ வேண்டாம், எனக்கு இக்கீரையினை அரிந்தெடுக்கும் பொறுமை இல்லாததனால் இங்கே கடைகளில் கிடைத்தாலும் வாங்குவதில்லை. எந்தங்கை அடிக்கடி குறிஞ்சாகீரை சுண்டல் செய்வாள்.

மட்டக்களப்பில் அதுவும் பெரியகல்லாற்றுச்சாப்பாட்டுக்கென தனி கைமணமும் பக்குவமும் உண்டு.. அந்த ஊர் கிணற்று நீரின் சுவையும் அவ்வூர் சமையலை ருசியாக்குகின்றதெனில் மிகையில்லை. அத்தோடு ஜாதி,மதம்,இனம்,அந்தஸ்து,தகுதி, தரம் பார்க்காது அறிந்தவர், அறியாதோர் என்றில்லாமல் வீட்டுவாசலுக்கு வரும் எவரையும் விருந்தோம்பி அனுப்பும் குணமும், உபசரிப்பும் அன்பும் கூட கல்லாற்றுச் சாப்பாடு சுவைக்க அதிக முக்கிய காரணங்களாக இருக்கின்றது..

இலங்கை உணவில் கிழக்கு மாகாணம் அதிலும் மட்டக்களப்பு விருந்தோம்பலுக்கும், உணவின் சுவைக்கும் பெயர் போனது. இதை அக்காலத்தில் வடக்கிலிருந்து கிழக்குக்கு வேலை மாற்றம் பெற்றோ ஏதேனும் தேவைக்காகவோ பயணம் செய்யும் ஆண்களை மாந்தீரிகம் செய்து மயக்குவதாகவோ, பாயோடு ஒட்டும் படி மருந்து வைப்பதாகவோ சொல்வார்களாம். மட்டக்களப்புக்கு செல்லும் ஆண்களும் பெரும்பாலும் அங்கேயே பெண் எடுத்து வாழ்க்கையில் செட்டிலாகி விடுவதும் இக்கதைகளை நிஜங்களாக்கினாலும் உண்மைக்காரணமாய் உபசரிப்பும் விருந்தோம்பலும், உணவின் சுவையும் தான் அடிப்படைக்காரணங்களாய் இருந்திருக்கின்றது. இருக்கின்றது.

குறிஞ்சா கீரை சுண்டல் செய்வது எப்படி என பார்க்கலாமா?
குறிஞ்சா இலைகள் பத்து
ஒரு கைப்பிடி தேங்காப்பூ
ஐந்து பச்சை மிளகாய்
20 சின்ன வெங்காயம் தோல் உரித்து மெல்லியதாக நறுக்கிக்கொள்ள வேண்டும்.
மஞ்சள், உப்பு
நான் வெஜ் சாப்பிடுபவர்கள் எனில் மீன் துண்டுகள் சேர்க்கலாம். வெஜ் எனில் சேர்க்காமல் விடலாம்,

எப்படி சமைக்கலாம்?
குறிஞ்சா கீரையை மேலே சொன்னபடி கழுவி துடைத்து அரிந்து எடுத்து கொள்ள வேண்டும்

பச்சைமிளகாயை நடுவில் கட் செய்து இரண்டாக்கி கொஞ்சம் நீர் விட்டு பாத்திரத்தில் போட்டு மஞ்சள் துளியும் உப்பும் சேர்த்து அவிய விட வேண்டும். பாத்திரத்தினை மூடி அவித்தால் மஞ்சள் வாசனை கீரையில் சேராது.

மீன் சேர்ப்பது எனில் மீனையும் கழுவி துண்டாக்கி பச்சை மிளகாய் சட்டிக்குள் போட்டு அவித்து கொள்ள வேண்டும். மீன் அவிந்ததும் தனியே பிரித்து அதன் முட்களை நீக்கி உதிர்த்து கொள்ள வேண்டும்.

பச்சை மிளகாய் அவிந்ததும் கரண்டி கொண்டு கடைந்து விட்டு வெஜ் கீரை சுண்டல் செய்ய விரும்புவோர்.. சூரிய காந்தி எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் கொஞ்சம் விட்டு அதனுள் கீரையை இட்டு கிளறி விட்டு உடனே தேங்காய்ப்பூவை சேர்த்து இரண்டு மூன்று தடவை கீரையுடன் கலந்து தேங்காய்ப்பூ சுண்டியதும் வெங்காயத்தினை சேர்த்து பாதி வெந்த பருவத்தில் ஒரே நிமிடத்தில் அடுப்பை விட்டு இறக்கி விட வேண்டும்.வெங்காயம் நன்கு அவியக்கூடாது. வெந்தும் வேகாமலும் பல்லில் கடி பட வேண்டும். அப்போது தான் கீரைச்சுண்டலே சுவையாக இருக்கும்,

குறிஞ்சா கீரை அதிகம் வேக விட்டால் கசப்பு அதிகமாகும், கீரை போடும் போது பாத்திரத்தில் தண்ணீரும் இருக்க கூடாது. பச்சை மிளகாய் அவித்து கடைந்ததும் அதன் நீர் வற்றி விட்டதா என கவனித்து கீரையை போட்டு கிளறவும். இவ்வகை கீரை சுண்டலுக்கு நீர் இருந்தால் அதிக கசப்புத்தன்மை இருக்கும், தேவையான அளவு உப்பும் சேர்த்தால் போதும், 

மீன் சேர்ப்பவர்கள் பச்சைமிளகாய் கடைந்தது முள் இல்லாமல் உதிரியாக இருக்கும் மீனை போட்டு கிளறி அதன் பின் மேலே சொன்ன முறையில் கீரை, வெங்காயம், தேங்காய்ப்பூ சேர்த்து கிளறி இறக்க வேண்டும்..

சுடச்சுட சோறும் கீரை சுண்டலும் உடலுக்கும் நல்ல ஆரோக்கியமாய் நோய் நொடி அண்ட விடாமல் வாய்க்கும் உருசியாய் கிடைத்த அருமந்த உணவுகளை விட்டு நாங்கள் நெடுந்தொலைவு வந்து விட்டோம்.

கீரைகள் சமைக்கும் போது என் பிள்ளைகளுக்கும் கொடுத்து பழக்கி இருப்பதனால் இன்னும் எங்கள் வீட்டில் கீரைக்கறிகளுக்கு இடம் உண்டு.

குறிஞ்சா இலைப்படங்கள் இணையத்தில் இருந்தே எடுத்து பகிர்ந்துள்ளேன்.

இந்தப்பக்கம் வந்து படிப்பவர்கள் உங்கள் கருத்துக்களை இட்டால் நானும் தொடர்ந்து எழுதும் உயிப்பூவை பெறுவேன் அல்லவா?

17 செப்டம்பர் 2017

வெந்தயக்குழம்பும் அம்மம்மாவும்

செவ்வாயும் வெள்ளியும் விரதம்!
மரக்கறிதான் சாப்பிடணும்,
சின்ன வெங்காயத்தை தோலுரித்து பொடியாக நறுக்கி கொஞ்சூண்டு தேங்காய்எண்ணெய் விட்டு வதக்கி வெந்தயம் தூவி புளிக்கரைசலைவும் கொச்சிக்காத்தூளுடன்   உப்பும் போட்டு ஒரு கிண்டு கிண்டி விடுவா.அம்மாடியோவ்.. இன்னும் கொஞ்சம் சோறு தா என நாலு தட்டு சோறு தின்னுவோம் வெந்தயக்குழம்பு அன்னிக்கு முழுக்க கையில் வாசனையோட இருக்கும்.
அப்படியே வேலி ஓரத்தில் நிற்கும் தூதுவளையில் இரண்டு கைப்பிடி பிடுங்கி சோத்துப்பானையில் கஞ்சி வடிச்சி அந்த சூடு சோத்துக்கு மேல் வாழையிலையை போட்டு அதுக்கு மேல் தூதுவளையையும் பச்சைமிளகாய் நாலையும் வைச்சு மூடி வைச்சிருவா. எரியும் விறகை அணைச்சி தணலில் வேக விட்டால் பத்து நிமிடத்தில் தூதுவளையை பச்சைமிளகாயுடன் சின்ன வெங்காயம் ஒரு பிடி தேங்காப்பூ வைச்சி அம்மியில் அரைச்செடுத்தால்....சுடச்சுட சோறும் தூதுவளை பச்சடியுமாய் அமர்க்களம் தான்.
அம்மம்மா கைச்சமையல் ஒருவிதம் என்றால் அம்மா சமையல் இன்னொரு விதம். எதை செய்தாலும் அன்பையும் அக்கறையையும் அள்ளி சமைப்பார்கள் என்பதனால் ருசியும் தனி.
சின்ன வெங்காயம் சின்ன சீரகம் தாளிச்சு தேங்காய்ப்பூ போட்டு அரைச்சி எடுக்கும் சட்னியும் தோசையும் எங்கம்மா சுட்டால் ஊருக்கே வாசனைவரும். அப்படி ஒரு ருசி எங்கேயும் சாப்பிட கிடைக்கவே இல்லை.
அப்பல்லாம் தூதுவளை பச்சடி,, கறிவேப்பிலை துளிரில் பச்சடி, முருங்கைக்கீரை துளிர் பச்சடி குறிஞ்சா கீரை சுண்டல், கானாந்தி முல்லை லெச்சகட்டை கீரைக்குள் புளி மாங்காயும் கீரி மீனும் போட்டு சொதி என எளிய உணவு தான், வீட்டு ஓரத்தில் வேலியில் வளரும் கீரைகளை கொண்டே சமைப்பார்கள்.
கெழுத்தி மீன் புளிமாங்காய் உப்பவியல்
கூனியும் புளிமாங்காயும் கடையல்
சள்ளல் மீன் மிளகு தண்ணீர்
ஆத்தில் பிடிக்கும் செல்வமீன் உப்பவியலோ பொரியலோ பசித்து ரசித்து ருசித்து  வசித்தோம். 

16 வயதில் சுவிஸுக்கு வந்து 13 வருடம் கழிச்சு 29வயதில் ஊருக்கு போய் ஊர் நினைவில் ஊர்ச்சாப்பாட்டை தேடினேன்.
எல்லாமே தொலைந்து போயிருந்தது. தொலைந்து தொலைவாய் நானும் போயிருந்தேன்.
எங்கே தேடியும் கிடைக்காத இனி என்றும் கிடைக்கவே கிடைக்காத பொக்கிசநினைவுகள் இனிமையானவை

28 ஆகஸ்ட் 2017

உணர்வற்று போன பின்???

எங்கள் கலாச்சாரத்தின் படி பெற்றவர்கள் பிள்ளைகளை தாங்கியே நம்பியே வாழும் சூழலில் இக்கால இளையோரிடம் இருகுடும்பத்தினையும் அனுசரித்து செல்லுதல் என்பது குறைந்து திருமணம் எனில் தாங்கள் இருவர் மட்டுமே எனும் புரிதல் அதிகமாகி, வேற்றுமைகள்,பிரச்சனைகள் என சரியான புரிதல்கள் இன்றி பெரியோரை தூரமாய் நிறுத்தி தனக்கு எல்லாம் தெரியும், தன்னால் எல்லாம் சமாளிக்க முடியும் என அகந்தை கொண்ட மனமும், சரியான் புரிதலின்மையும், வழிகாட்டுதல் இன்றியும் தவறான நபர்களின் ஆலோசனையுமாக சீர்குலையும் குடும்பங்கள் தற்காலத்தில் அதிகமாகி... பிரச்சனைகளை எதிர் நோக்க தன்னம்பிக்கையற்று தற்கொலையை நாடிச்செல்லும் சூழல் அதிகரித்து வரும் இன்றைய சூழலில்

நமக்குப்பின் நம்மை நம்பி இருப்போர் நிலை குறித்து என்றேனும் சிந்தித்திருக்கின்றோமா?

வீட்டின் ஆண் மகனாய் பிறந்து தாயின் அரவணைப்பில் வளர்ந்து திருமணமானபின் மனைவி, தாய் என வரும் சூழலில் இருவரையும் ஒரே தராசில் நிலைக்க வைக்க முடியாதவர்கள் தங்கள் இல்லாமை, இயலாமை நேரம் தன்னை நம்பி இருக்கும் தாய், தகப்பன், சகோதரர்கள், உற்றார்,உறவினர் நிலை குறித்து என்றேனும் சிந்தித்திருக்கின்றீர்களா?
கடவுள் சட்டப்படி தாயையும், தகப்பனையும் அசட்டை பண்ணாமல் அவர்களுக்கான கடமையை நிறைவேற்றி, மனைவியாளவளுக்குரியதையும் சரியாக செய்ய வேண்டும் என்றிருந்தாலும் ஒரு ஆண்மகனுக்கு மனைவி எனும் பந்தம் இடையில் வந்திருந்தாலும் அவனுக்குரிய அனைத்து ஆளுமைகளையும் உலகச்சட்டத்தின் படி மனைவிக்கே எனும் சாதகமிருப்பதும் பெண்களுக்கான பாதுகாப்பு சட்டங்களையும் பயன் படுத்திடும் வாய்ப்பு கிடைக்கின்றது.
ஆனால்........?
ஒரு ஆண் தாயின் கர்ப்பந்திலில்ருந்து பிறந்து வளர்ந்து 25 தொடக்கம் 30 வருடங்கள் பெற்றோரால் வளர்க்கப்பட்டு, நேசிக்கப்பட்டு திருமணம் எனும் பந்தத்தின் மூலம் முழு உரிமையும் மனைவிக்கு தாரை வார்க்கப்ப்ட்ட பின் வாழும் காலத்திலேயே அவனால் மனைவியையும் சொந்தக்குடும்பத்தினையும் சமாளிக்க முடியாத போது அவன் இல்லாத நிலையில் அவனை நம்பி இருக்கும் அவன் தாய் தகப்பன் நிலை என்ன ஆகும் என்றேனும் யோசித்திருக்கின்றீர்களா?
நாளை என்ன இன்றே அடுத்த நிமிடம் என்ன நடக்கும் என்பதை நாமறியோம் எனும் நிலையில் உங்களுக்கான எதிர்காலம் குறித்து மட்டுமல்ல நீங்கள் இல்லாத வாழ்க்கையை தைரியமாக உங்களைச்சார்ந்தவர்களும் எதிர் கொள்ள திராணியுள்ளவர்களாகும் படி திட்டமிடுங்கள்.
வீட்டுக்கு ஒரு பையனாயிருந்தால் நீங்கள் மட்டுமே உங்கள் பெற்றோருக்கான ஊன்று கோலாயிருக்க முடியும்,. இறப்பும், பிறப்பும் இயற்கையின் படைப்பில் இன்றியமையாது போனது. இழப்பினை ஈடுகட்ட எவராலும் இயலாது.
இழப்பு என்பது இறப்பு மட்டும் அல்ல.உணர்வற்று உயிர் உசலாடும்  நிலை, நோயுற்று உடல் அங்கங்கள் செயலற்று போகும் நிலை என இல்லாமை இயலாமை   ஆக்ரமிக்கலாம்.
இழப்பின் நேரம் உடல், உள ஆரோக்கியம் சார்ந்து சொந்தபந்தங்கள் துணை நின்றாலும் பொருளாதார ரிதியாக உங்களை நம்பி இருக்கும் உள்ளங்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றார்கள்.
சொந்தமும் போய் சொத்தும் போய் நடுவீதியில் நிற்கும் நிலை ஏன்?
வாழும் காலத்தில் இன்னாருக்கு இது என முடிவெடுத்து அனைத்தினையும் எழுத்தில் எழுதி வையுங்கள். எழுத்தில் எழுதுவதை சம்பந்தப்ப்ட்டவர்களுக்கும் அறிவியுங்கள்.
உலகத்து சட்டங்கள் உங்கள் உடல் முதல் சொத்து வரை அனைத்தும் மனைவிக்கு மட்டுமே முதல் உரிமை என சொல்லி செல்லும் போது உங்கள் இல்லாமை மனதை அழுத்த உடலையேனும் உரிமையாய் தொட்டு தடவ , கண்ணீர் விட்டு கதறி அழ , கடைசி நிமிடங்கள் உங்களோடு கழிக்க உங்கள் மனைவியை கெஞ்சி கேட்கும் நிலையும் வரும்.
மனைவி அனுமதிக்காவிட்டால்????
பாதியில் வந்த சொந்தம் ஆதியில் தொடரும் பந்தத்தை கதறிடிக்கும் அவலமான நிலை வரலாமா?
முன்னொரு காலத்தில் திருமணம் என்பது ஆயுள் பந்தமாயிருந்தது தான். ஆனால் இன்றைய உலகமயமாக்கலில் எதுவுமே நிலையானதில்லை.
கணவனோ மனைவியோ இழப்பின் பின் காலம் முழுக்க நினைத்து கண்ணீர் விடும் சூழலும் இப்போதில்லை. கலங்கி நிற்பதுவ்ம் இல்லை. குழந்தைகளை கூட தூக்கி போட்டு விட்டு தனக்கென ஒரு வாழ்க்கை தேடி அடுத்த சில வருடங்களில் செல்லலாம். இயந்திர உலகில் அன்பும் வற்றித்தான் போனது. காலத்துக்கு ஏற்ப திட்டமிடுங்கள்.
நேசிப்பும் யாசிப்பும் தூசிக்கப்படும் காலம் இது. 
வாழும் வாழ்க்கையில் நீங்கள் எதை விதைக்கின்றீர்களோ அதை மட்டுமே விளைவிக்க முடியும், விதை ஒன்று போட்டால் மரம் ஒன்றாய் முளைக்கவே முளைக்காது.

திருமணம் என்றாலே அவன் சொந்ததாயையும் தகப்பனையும் மொத்தமாக விட்டு விலகி அதாவது அதுவரையான ஆசாபாசங்கள், சொந்த பந்தங்கள் அனைத்தினையும் கழுவி போட்டு விட்டு மனைவிக்கு மட்டுமே சொந்தம் எனும் கையறு நிலை தான் இங்கே பல ஆண்களுக்கு வரமாகி இருக்கின்றது.

அதே போல் பெற்றோர் சரியான புரிதலுள்ளவர்களாக மகனின் மனைவியை 
மறுமகளாக நேசிக்காவிட்டால் கணவன் இழப்பின் பின் உங்களை மட்டுமே நம்பி வந்த மனைவி அவர்களினால் துன்பப்படும் சூழலும் விலக்கி வைக்கப்படும் நிலையும் கைவிடப்பட்டு அனாதரவான வாழ்க்கைக்குள்ளும் தள்ளப்படலாம்.

இவ்விடயத்தில் மேலைத்தேய நாட்டினர் மிகத்தெளிவாக திட்டமிடுவார்கள். தங்களுக்கு பின் யார் எப்படி நடத்தப்பட வேண்டும் என்பதை சிக்கலாக்கி கொள்ள மாட்டார்கள்.
ஆனால் நாங்கள்?/
சிந்தியுங்கள்...! நெருப்பென்றால் வாய் வெந்து விடாது.

என்னைவிட்டால் யாருமில்லை!

தன்னை விட்டால் யாருமில்லை, தான் மட்டுமே அனைத்தும் அறிந்த அறிவாளி, இவ்வுலகில் தன்னைப்போல் புத்திஜீவிகள் இல்லை என இறுமாப்பாய் சக மனிதரை துச்சமாய் நினைப்பவர்களையும் புறம் பேசி அகம் குதறும் ஓநாய்களையும் இனம் காண முடியாதிருப்பதேன்?
தன் நாவினால் முகஸ்துதி பேசுகிறவனைப்பார்க்கிலும், கடிந்துகொள்ளுகிறவன் நம் மேல் அதிக அக்கறை கொண்டவனாயிருப்பான் என உணர முடியாதிருப்பதேன்?
துர்க்கிரியைகளுக்குத் தக்க தண்டனை சீக்கிரமாய் நடவாதபடியால், மனிதரின் இருதயம் பொல்லாப்பைச் செய்ய துணிகரங்கொண்டிருக்கிறது. ஆனாலும் எல்லாக்காரியத்துக்கும் காலமும் நியாயமும் உண்டு;
இன்னது சம்பவிக்கும் என்று மனிதன அறியானே; அது இன்னவிதமாய்ச் சம்பவிக்கும் என்று மனிதனுக்கு சொல்லத்தக்கவர் யார்?
பாவி நூறுதரம் பொல்லாப்பை செய்து நீடித்து வாழ்ந்தாலும் என்ன?
உத்தமனாய் நடக்கிறவன் இரட்சிக்கப்படுவான்; மாறுபாடான இருவழியில் நடக்கிறவனோ அவற்றில் ஒன்றிலே விழுவான்.
கர்த்தருக்கு முன்பாகமாத்திரமல்ல, மனுஷருக்கு முன்பாகவும் யோக்கியமானவைகளைச் செய்ய நாடுங்கள். 2 கொரிந்தியர் 8:21

ஊமையனுக்காகவும் திக்கற்றவர்களெல்லாருடைய நியாயத்துக்காகவும் உன் வாயைத் திற -நீதிமொழிகள்.31:8

ஏழையாயிருக்கிறான் என்று ஏழையைக் கொள்ளையிடாதே; சிறுமையானவனை நியாயஸ்தலத்தில் உபத்திரவப்படுத்தாதே. -நீதிமொழிகள்.22:22
சமீபத்திய நிகழ்வுகளும் மனித மனங்களின்  மாறாட்டங்களும் அதனால் ஏற்பட்ட இழப்பின் வலிகளினாலும் என் எழுத்துக்களிலும்  அவை எதிரொலிக்கின்றதென்பேன். கொஞ்சம் பொறுத்திருங்கள். காலம் அனைத்துக்கும் மருந்தானால்  அனைத்திலிருந்தும் மீண்டும் வருவேன். 





13 ஆகஸ்ட் 2017

கடைசி வரை யாரோ?

உள்ளதை உள்ள படி
நடந்ததை நடந்த படி 
கடந்தவை கடந்த படி
உணர்ந்ததை உணர்ந்து படி

இன்று நடப்பவை யாருக்கோ எவருக்கோ தானே என கடந்தபடி செல்லும் நாம் அப்படிகளை தாண்டும் சூழலுக்குள் தள்ளப்படுவோம் என்பதை உணர்ந்தே கடப்போம்.
நாம் வாழும் காலத்தில் நம நலனில் அக்கறை காட்டி புத்திமதி சொல்பவர்களை தூரமாய் நிறுத்தி நமக்குத்தேவையில்லாதவர்களாகி ஒதுக்கி அவர்களின் திட்டலுக்கும் குட்டலுக்கும் பின்னிருக்கும் ஆழ்ந்த அன்பை உணராமல் சட்டென கோபம் கொண்டு விலகிச்சென்று விடுகின்றோம்.
குறைகள் சொல்லாத, போலித்தனமானவர்களை உண்மை நட்பென நம்பி உயர்த்தி மதிப்பளிக்கின்றோம்.
சூழ்நிலைகள் எங்கே எவருக்கு சாதக. பாதமாகும் என எவராலும் நிச்சயித்திட முடியாது.
விதியை மதியால் வெல்ல நினைப்பதும், எதிர்காலக்கனவுகளைக்குறித்த திட்டமிடலும், என்னாலே எல்லாம்முடியும் எனும் செருக்குடனும், 
நாமும் துன்பப்பட்டு, அடுத்தவரையும் துன்பப்படுத்தாமல் நல்லதை நினைப்போம், நல்லதை செய்வோம்.

நட்பெனப்படுவதும், உறவெனப்படுவதும் உள்ளதை உள்ளபடி உள்வாங்கி கண்டு கொள்ளாமல் செல்வது அல்ல. நன்மை, தீமை உணர்ந்தி வழி காட்டுவதே!
இவ்வுலக வாழ்வெனப்படுவது நீண்ட தூர ரயில் பயணமே! நிலையான தரிப்பிடம் நமக்கு இங்கே இல்லை. நிர்வாணியாய் வந்தோம், நிர்வாணியாய் செல்வோம், நாம் செல்லும் போது நாம் ஓடி ஓடி சேர்த்த பொன் பொருள் எதுவும் நம்முடன் வரப்போவதே இல்லை.
எத்தனையோ திட்டங்களை தீட்டுகின்றோமே.. மரித்தபின் என்னாவோம் என யோசித்திருக்கின்றோமா?
நான் எனும் அகந்தை அழிந்து அதுவானபின் என்னவாவோம்?
சுயமில்லாமல் உணர்வற்று உயிர் வற்றி போனபின்னரான சூழலை எதிர்கொள்ளும் படியாக நம்மை சார்ந்து நம்பியிருப்போரைக்குறித்து சிந்தித்திருக்கின்றோமா? .
  • ஒரு மரணம், தாய், தாரமிருந்தும் அனாதைப்பிணமாக எரிக்க அரசு முடிவெடுத்ததாக அறிந்த   தாயின் கதறலையும் தாய் மாமன் பதறலையும் அருகிலிருந்து உணர்ந்து இறுதிக்கிரியைகளை செய்யவேணும் அவன் உடலை பெற்றுக்கொடுங்களேன் எனும் இறைஞ்சி நின்ற போது  மொழி புரியாமல்  புலம்பெயர் எங்கள் இனம் படும் பாடுகள் கண்டு என் மனம் துடித்தது..சடலத்தினை வைத்து வேட்டையாடும் மனிதர் குணம் கண்டு அதிர்ந்தே அடங்கியது.
  • இறுதிச்சடங்கை  செய்ய அவன் உடலை பெற்று அவனை அதற்கான வாகனத்தில் அனுப்பும் வரை நாங்கள் அலைந்த அலைச்சலும் பாடுகளும் எனக்குள் மிகப்பெரிய தாக்கத்தினை தந்திருக்கின்றது.  என்ன தான் காசு பணம் சேர்த்து வைத்தாலும் கடைசி நேரம் துணை வரவும், துணாய் நிற்கவும் நான்கு மனிதரையேனும் நாம் சேர்த்து வைக்க வேண்டும். 
நாங்கள்குடும்பமாய் வருடத்துக்கு ஒரு வாரம் சேர்ந்து நான்கு பேரும் இத்தாலி செல்ல விடுமுறைப்பயணம் திட்டமிட்டிருந்தோம், பயணத்திட்டத்துக்கு முதல் நாள் நதியில் கண்டெடுத்த சடலத்தினை உறுதிப்படுத்த டீ,என்ஏ டெஸ்டுக்காக தாயை அழைத்த போதே புரிந்து கொண்டேன். (நாங்கள் இங்கே  மொழிபெயர்ப்பு மற்றும் உதவிகள் செய்வோம், சர்ச் ரிதியிலான ஊழியம் கடந்த இருபது ஆண்டுகளாக இனமதம் மொழி பாராது அர்த்த இராத்திரியானாலும் பிரச்சனை உதவுங்கள் என கேட்பவர்களுக்கு உதவி செய்கின்றோம்). அதன் பின் பயணத்திட்டம் கைவிடப்பட்டு பிள்ளைகளும் சரியாக புரித்துணர்வோடுஒத்துழைத்து இவ்வருடம் இல்லாவிட்டால் என்ன அடுத்த வருடம் செல்வோம் என பேசி இங்கே இருந்து அனைத்தையும் ஒழுங்கு செய்து இன்னும் அதற்காக காரியங்கள் முடியவில்லை.. உண்மையில் நாங்கள் இத்தாலி புறப்பட்ட பின் இப்படி செய்தி அறிந்திருந்தால் அந்த தாயின் நிலை குறித்து எங்களால் நினைக்கவே முடியவில்லை. ஏன் எனில் அவர் நீரழிவு நோயினால் பாதிக்கப்ட்டு இரு கால்களும்  நடக்க முடியாத நிலையில் இருக்கின்றார். இத்தாலி பயணத்திட்டம் ஒரு மாதம் முன் ஆரம்பித்தும் நான் ஹோட்டல் ஏதும் புக் செய்யாமல் போகும் முதல் நாள்  போன் செய்து  புக் செய்வோம் என தள்ளிப்போட்டதும்   காரணத்தோடு தான் என்றானது. 

இந்த உணர்விலிருந்து சீக்கிரம் மீண்டு வர வேண்டும் என நினைத்தாலும் தொடரும் காரியங்கள் அது எளிதானதலல் என்றே உணர்த்தி நிற்கின்றது. பார்க்கலாம். யார் பதிவும் படிக்கவில்லை, மனசு சேன்ஞ் ஆக எதிர்பார்த்து அவ்வப்போது பேஸ்புக்கில் அமர்வதோடு சரி

மரணத்தின் பின் சடலத்தை வைத்து  அலைந்த அலைச்சல்களின் தாக்கத்தினால் என் மன உணர்வுகளை அந்த நொடியே கண்ணீர் அஞ்சலி ஆக்கினேன்.  
 

12 ஆகஸ்ட் 2017

நிஷாவின் அனுபவ மொழிகள்.

 வீடுகட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே, மூலைக்குத் தலைக்கல்லாயிற்று. (சங்கீதம் 118:22,23).
உண்மையான வார்த்தை.
நம்மால் வேண்டாம், தேவையில்லை என ஒதுக்கப்பட்டவர்களே நமக்கு முக்கியமானவர்களாக போகும் காலமும் வரும்.
நமக்கு தேவையில்லை என நம்மால் ஒதுக்கப்பட்டவர்கள் நம் மரணத்தின் இழப்பை எண்ணி துடிப்பவர்களாக இருப்பார்கள்.
நம்மால் உயர்த்தப்படுகின்றவர்களினாலேயே நாங்கள் தாழ்த்தப்படுவோம். அழிக்கவும் படுவோம்
நாம் வாழும் காலத்தில் நமக்கு முக்கியமானவர்கள் என மதித்து நடக்கும் எவரும் நாம் தாழும் காலத்தில் எம்முடன் துணை வருவதில்லை.
நாம் வளமாய் வாழ்ந்த காலத்தில் நாம் வேண்டாம் என ஒதுக்கி நடத்துபவர்களே நம் துயர நேரத்தில் துணை வருகின்றார்கள்.
நாம் யாரையெல்லாம் வேண்டாம் என ஒதுக்குகின்றோமோ அவர்கள் நமக்காக கண்ணீர் சிந்துகின்றவர்களாகவும், உதவி செய்பவர்களாகும் இருப்பார்கள்.
நாம் தாழ்த்துகின்றவர்கள் நம்மை உயர்த்துகின்றவர்களாக இருப்பார்கள்.
ஒருவரை திருப்திப்படுத்த இன்னொருவரை பகைப்பதும், வெறுப்பதும், ஒதுக்குவதும் நமக்கு நாமே வைக்கும் கொள்ளி.
மக்கள் கூடி இருக்கும் சபையில் ஒருவரை கனப்படுத்தும் போது அவர்கள் அதற்கு தகுதியானவரா என்பதை ஆராய்ந்து எவரையும் புகழாமலும் இகழாமலும் எல்லோருடனும் ஒரே சம மன நிலையில் நடப்பது எக்காலத்திலும் சிறந்தது.
 

12 ஜூலை 2017

புலம் பெயர் வாழ்க்கையின் நிதர்சனம்

 புலம் பெயர் வாழ்க்கையின் நிதர்சனம்
***************************************************
புலம்பெயர் அகதி வாழ்வை சொர்க்கமாய் நினைத்து தாய் தகப்பன் அணைப்புக்குள் கவலையின்றி பட்டாம் பூச்சிகளாய் பறந்து திரிந்து நாட்டின் பிரச்சனைகளாலும், உயிராசுறுத்தல்களாலும், பகட்டுஆடம்பர வெளி நாட்டு மோகத்தாலும், இருக்கும் வீட்டை வித்து நகை நட்டை அடவு வைத்து சொர்க்கம் தேடும் இளையோர் வாழ்க்கை ஐரோப்பிய நாட்டினுள் காலடி எடுத்த வைத்த சில வருடங்கள் நரகமாகவே காட்சி அழிக்கும்.
ஆடம்பர அகம்பாவ சுபாவங்களுடன், பிரச்சனைகள், பொறுப்புக்கள் ஏதுமில்லாமல் அப்பா அம்மா சேர்த்து வைத்ததில் ஊர் சுற்றித்திரிவோராய் தேவைக்கு மேல் நான்கு ஐந்து போன் வைத்து தங்களை அரண்மனை வாசிகளாக காட்டிக்கொள்ளும் ஒரு சிலரால் உண்மையாக பாதிக்கப்பட்டு இள வயதில் சுமைதாங்கியாகுவோரும் விமர்சிக்கப்படுகின்றார்கள்.
சொகுசு வாழ்க்கை தேடி வேலை செய்ய விருப்பமில்லாமல் அரச உதவியில் பீரில் குளித்து பாலில் மூழ்கி மனம் போன போக்கில் வாழும் பலரால் உண்மைத்தேவையுடன் தவிக்கும் சிலர் பாதிக்கப்படுகின்றார்கள்
அகதியாக நுழைந்த நாட்டில் மொழிபுரியாது, காம்ப் பெடியள் என கேலியும் கிண்டலுமாக ஒதுக்கப்பட்டு, பரிதாபப்பார்வையோடு தாங்கள் மட்டும் வானத்திலிருந்து குதித்த தேவர்களாக தம்மை எண்ணி டாம்பீகம் காட்டும் பழைய புலம் பெயர் வாசிகளின் அசட்டைகளை தாங்கி, அரசு கொடுக்கும் சொற்ப பணத்தில் உண்டு உடுத்து அதிலும் சேமித்து நாட்டில் தம்மை நம்பி வாழும் தாய் தமக்கை தங்கைக்கும் அனுப்பி,,, அவர்களையும் வாழ வைத்து,,, வாங்கிய கடனுக்கும் அடவு வைத்த வீடு, நகைக்கும் வட்டி குட்டி போடுவதை நினைத்தும் தன்னை நம்பி திருமணக்கனவோடு காத்திருக்கும் அக்கா தங்கைகளை நினைத்தும் வழி அறியாது தவிப்போராய் வாழும் வாழ்க்கையின் நிதர்சனம் புரியாது கடன் பட்டேனும் தாய் நாட்டை விட்டு அடிமை வாழ்க்கை தேடி நடுக்கடலிலும், காட்டிலும் உயிரை துச்சமாக்கி சாகாசப்பயணம் செய்ய தயாராகுகின்றார்கள்.
சில வருடங்கள் புலம்பெயர்ந்த பின் தாய் நாட்டுக்கு செல்லும் பலர் இங்கே வங்கிகளின் கடன் எடுத்தும், வட்டிக்கு கடன் வாங்கியும் ஊருக்கு சென்று தாம் தூம் என ஆடம்பரமாக செலவுகள் செய்வதும் பிறந்தது முதல் மினரல் வாட்டரில் மூழ்கி எழுதவர்கள் போல் பணத்தினை துச்சமாக செலவுகள் செய்து தாங்கள் அரண்மனை வாழ்வு வாழ்வதாய் கண்ணாமூச்சி விளையாட்டு விளையாடி விட்டு மீண்டும் அகதி வாழ்க்கைக்குள் திரும்பி வாங்கிய வங்கிக்கடனுக்காக அடுத்த ஐந்து வருடங்களேனும் வட்டியும் முதலும் கட்ட இரவும் பகலும் குளிரிலும் பனியிலும் வெயிலிலும் ஓடி ஓடி உழைப்பதை எப்போதும் எம்மக்களுக்கு வெளிப்படுத்த மாட்டார்கள்.
இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை க்கதை போல் அங்கிருப்போருக்கு இந்த வாழ்வு சொர்க்கம் போலும் இங்கிருப்போருக்கு அந்த வாழ்க்கை சொர்க்கம் போலவும், காட்சி தந்து மாடாய் உழைத்து ஓடாய் தேய்ந்து நாற்பதில் ஊர் பேர் தெரியாத புதுப்புது நோய்களையெல்லாம் உடலில் தாங்கி மாரடைப்பிலும் போய் சேர்ந்து விடுவார்கள்.
சொந்த நாட்டில் சொந்தம்பந்தம் சூழ வீடு காணி, பட்டம் பதவி என சொகுசாய் மதிப்பாய் வாழ்ந்தாலும், நாட்டை விட்டு வெளியேறி அன்னிய நாட்டில் சரணடைந்து விட்டால் எல்லோரும் அகதியே என்பதை மறந்து விடும் பலர் இங்குண்டாம்.

11 ஜூலை 2017

சிதறும் குடும்ப வாழ்க்கைகள்

மேய்ப்பன் இல்லாத ஆடுகளைப் போல் சரியான ஆலோசனைகளின்றி சிதறும் குடும்ப வாழ்க்கைகள்”.
திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றதோ இல்லையோ பலரின் அகம்பாவங்கள், அதிகாரங்களுக்குள் சிக்குப்பட்டு சின்னாபின்னமாகுவது உண்மை.
ஊருக்குள் பெரியோராய், நல்லவர்களாக வேஷம் தரிப்போரென தங்களை வெளிக்காட்டிக்கொள்வோரின் உள்ளத்து உடைசல்களை அறியாது அறிவுரை, ஆலோசனை எனும் பெயரின் விட்டில்களாய் விழும் கணவன், மனைவி பிரச்சனைக்குள் மூன்றாவதாய் நுழைவோர். ஆண், பெண் எனும் நிலையில் ஒருபக்கச்சார்பாக முடிவெடுக்காது இருவரின் உள, உடல் நிலையினையும் கருத்தில் கொள்வது மிகவும் முக்கியம்.


ஆலோசனையில்லாமையால் எண்ணங்கள் சித்தியாமற்போம்; ஆலோசனைக்காரர் அநேகர் இருந்தால் அவைகள் உறுதிப்படும் என்றாலும்,ஒருபக்கச்சார்பான அவசர ஆலோசனைகள் , உதவிகள் பல நேரம் உயிர், உடல், உள இழப்புக்களையும் பாதிப்புக்களையும் தோற்றுவிக்கும் என்பதை உணராதோராய் இருக்கின்றோமா?
யாருக்கோ தானே? யாரோதானே என இன்றைய நிலையில் எவனுக்கோ நடப்பதை வேடிக்கை பார்க்கும் நம் வாழ்வில் நாளை என்ன நடக்கும் என்பதை அறிவோமா?
ஒரு உயிரை தேடி கடந்த ஐந்து நாட்களாக அலையும் இந்த நொடியில் அவன் செய்த தவறுகள் மறைந்து போனதே!
யாரை நொந்து என்னாகும்?
தொலைத்து விட்டோமே என கனத்து போன மனதுடன் பிரச்சனையில் அடி நுனி புரியாது தொலைத்த பின் தேடிக்கதறும் நொடியில் பிரச்சனையின் ஆரம்பத்தில் எம்மை நாடி இருந்திருக்கலாமே எனும் மன ஆதங்கமும் வலியுமாக.........................கடவுள் பயமற்று போனோமா?
எங்கே சென்று கொண்டிருக்கின்றோம்.
மரணமில்லாத வீடு உண்டா?
பிரச்சனைகளில்லாத குடும்பங்கள் உண்டா?

அடுத்தவர் குடும்ப பிரச்சனைகளில் மூக்கை நுழைத்து ஆலோசனை எனும் பெயரில் அக்கிரமங்களை நடத்துமுன் அதற்கு நாங்கள் தகுதியானோரா என நம்மை நாம் ஆராய்ந்து கொள்வோம்.

23 ஜூன் 2017

அண்ணன் தங்கை பாசம் சொல்லும் பாடல்கள்



படம் இணையத்திலிருந்து  
  1. அண்ணன் ஒரு கோயில் என்றால் தங்கை ஒரு தீபம்
  2. அண்ணன் தங்கை உறவாகும்- மருதாணி
  3. அழகான சின்னத்தேவதை
  4. ஆனந்தக்குயிலின் பாட்டு
  5. இந்த மன்றத்தில் ஓடி வரும் 
  6. இரத்தத்தின் இரத்தமே
  7. எல்லாமே என் தங்கச்சி- என் தங்கை கல்யாணி
  8. எதையும் தாங்குவேன் அன்புக்காக 
  9. எந்தன் பொன் வண்ணமே
  10. என்ன தவம் செய்து விட்டோம் 
  11. என் தங்கை ஆயிரத்தில் ஒருவள் என்று பூக்களும் நட்சத்திரங்களும் சொல்லும், 
  12. ஒரு தங்க ரதத்தில் பொன் மஞ்சள் நிலவு
  13. ஒரு கொடியில் இரு மலர்கள்-காஞ்சித்தலைவன் 
  14. ஒரு நேச மேகம் உயிர் தீண்டும் நேரம் நான் மெதுவாய்க்கரைய
  15. கண்ணனின் சன்னிதியில் 
  16. கல்யாணச்சாப்பாடு போடவா
  17. காத்தாழம் காட்டு வழி
  18. கொடியில் இரண்டு மலர் உண்டு.- உயிரா மானமா?
  19.  சாமந்திப்பூப்போல சாய்ந்தாடம்மா 
  20. சின்னத்தங்கம் என் செல்லத்தங்கம்
  21. பூப்பூவாய் புன்னகைக்கும் இவள்
  22. பூ மழை தூவி வசந்தங்கள் வாழ்த்த
  23. பூ ஒன்று வளர்த்தேன் வாசமும் இல்லை
  24. மல்லிகை முல்லை பொன்மொழிக்கிள்ளை
  25. மலர்ந்தும் மலராத 
  26. மலர்களைப்போல் தங்கை உறங்குகின்றாள்
  27. மானூத்தி மந்தையிலே மாங்குட்டி பெத்த பயிலே
  28. மண்ணைத்தொட்டு 
  29. முத்து நகையே
  30. முத்து முத்தான கண்ணீர்த்துளிகளை விரயம் செய்து ஏன் அழுகிறாய்
  31. தங்க நிலவே உன்னை உருக்கி
  32. தங்கச்சி என் தங்கச்சி தங்கமான தங்கச்சி - ராஜ காளி அம்மன்
  33. தங்கச்சிக்கு சீமந்தம் தவிக்குது என் பந்தம்
  34. தண்ணீரிலே தாமரைப்பூ
  35. தாயின் முகமிங்கு நிழலாடுது
  36. திரு நிறைச்செல்வி  மங்கயர்க்கரசி
  37. தென்  பாண்டித்தமிழே
  38. தென்கிழக்குச்சீமையிலே செங்காத்து பூமியிலே
  39. தோள் மீது தாலாட்ட என் பச்சைக்கிளி நீ தூங்கு
  40. நண்டூருது நரியூறுது
  41. வெண்மேகம் விண்ணில் நின்று கண்ணே இன்று பன்னீர் தூவும்... செவ்வானம் மண்ணில் வந்து மஞ்சள் நீராட்டும்
                                          
Agneepath - Abhi Mujh Mein Kahin ஹிரிதிக் ரோசன் ,

எங்கள் பிளாக்கில்  வெள்ளிக்கிழமை பதிவாக வந்திருக்கும்    வெள்ளி வீடியோ. ஏழேழு ஜென்மம் இந்த அண்ணன் தங்கை சொந்தம் வேண்டும். எனும் தலைப்பில்  அண்ணன் தங்கை பாடல் தொகுப்பை   கண்டதும் நான் சேனைத்தமிழ் உலா வில் ஒருவருடம் முன்பு  பகிர்ந்த பாடல் தொகுப்பு நினைவுக்கு வந்தது. எங்கள் பிளாக் பதிவுப்பாடல் தொகுப்பில் வந்த பாடல்களில்  13  பாடல்கள் என் தொகுப்பில்  இல்லை. அண்ணன் தங்கை பாசம் சொல்லும் பாடல்கள் இத்தனை உண்டென்பதே இப்பதிவுகள் பார்த்ததும் தான் அறிய முடிந்தது. 

ஒரு காலத்தில் இந்த அண்ணன் தங்கை பாடல்களை  இணையத்தில் தேடி இருக்கின்றேன். இணையத்திலும் இத்தனை பாடல்கள் அண்ணன் தங்கை பாசம் சொல்ல இருந்தாலும் அவை  ஒரே தொகுப்பாய் இல்லாமல் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருப்பதை ஒரு தொகுப்பாக்கினால் என்ன எனும் சிந்தனையில் தோன்றியதே இந்த  பதிவு. 

பாடல்களை ஒலி ஒளியாக வரிவரியாக பதிந்து முழுத்தொகுப்பாக்க நேரம் எடுக்கும் எனினும் இப்பதிவில் முதல் வரிகளை  மட்டும் நினைவு படுத்தும் படி மொத்தம் 39 பாடல்களை   தொகுத்திருக்கின்றேன். 

கீழே இருக்கும் இணைப்புக்களில்   இங்கே தொகுத்திருக்கும் பாடல்களுக்குரிய ஒலிஒளிக்காட்சிதொகுப்பும், வரிகளும் இணைக்கப்பட்டிருக்கின்றது. 

இந்த தொகுப்பில் இல்லாத வேறு பாடல்கள் உங்களுக்கு தெரிந்தால் அதை பின்னூட்டத்தில் சொல்லுங்கள் நட்பூக்களே!

  நன்றி எங்கள் பிளாக்..

கறுப்பு மைப் பொட்டுக்காய்ச்சுவது எப்படி?

பேஸ்புக்கில் இணுவையூர் மயூரன் அவர்கள் பதிவில்  பொட்டுச்சிரட்டை  படம் இட்டிருந்தார். பொட்டுச்சிரட்டைகுறித்த பழைய நினைவுகளுடன் பொட்டுக்காய்ச்சுவது எப்படி என இணையத்தில் தேடினால் சரியாக தரவுகள் இல்லை என்பதனால் நாமாவது நமக்குத்தெரிந்ததை எழுதிப்பதிவாக்கி விடலாம்  என நினைத்து பொட்டுக்காய்ச்ச ஆரம்பித்து விட்டேன். 

புகைப்படம் நன்றி இணுவையூர் மயூரன் 

சிறுவயதில் எங்கள் வீட்டில்  அம்மா தேங்காய்ச்சிரட்டைகளில் பொட்டுக்காய்ச்சி ஊற்றி காயவைத்தும் வைப்பார். வருடக்கணக்கில் அந்த பொட்டுச்சிரட்டை பயன் படும். 

ஸ்டிக்கர் பொட்டு அதிகம் பாவனைக்கு வராத காலங்களிலும்  தினம் பள்ளி செல்லும் போது  சிரட்டையில் இருக்கும் மையை கொஞ்சம் தண்ணீர் தெளித்து தடவினால் கறுப்பு மையாக வரும். அதை  நெருப்புக்குச்சியின் குண்டு முனைப்பக்கமாக  ஒட்டி  நெற்றியில் நடுவில் மேலிருந்து கீழாக  ⧫  கோடு போட்டு கீழே அதே குச்சியின் முனை அளவு ஒரு டொட் வைப்போம். 

                                     
அதிலும் முக்கியமாக சின்னக்குழந்தைகளுக்கு  ஆணானாலும், பெண்ணானாலும்  மூன்று வயது வரையேனும்  நெற்றியில் பெரிதாகவும் கன்னத்தில் சிறிதாகவும் ஒரு பொட்டு வைத்து அழகு படுத்தி விடுவார்கள். எங்கள் வீட்டிலும் இதற்காகவே பொட்டுச்சிரட்டை காலியாகாமல் காய்ச்சப்பட்டு நிரப்பப்பட்டு கொண்டிருக்கும். கன்னத்தில் வைக்கும் குட்டி வட்டம் திருஷ்டிக்கானது என்பதும் நம்பிக்கை தான். 

படம் இணையத்திலிருந்து 

ஸ்டிக்கர் பொட்டு எனும் பெயரில் விதவிதமான வடிவங்களிலும்,வர்ணங்களிலும்  பொட்டுக்கள் வந்த பின்னும்  இந்த சிரட்டைப்பொட்டுக்கு மவுசு இருக்கத்தான் செய்தது.. கொஞ்சம் வளர்ந்த பின் சந்துப்போட்டெனும் பெயரில் குட்டி டப்பாவில் சிவப்புக்கலர் பொட்டு வாங்கித்தந்தார் அம்மா. அதை  நெற்றிக்கு வைத்ததை விட கைவிரல்களுக்கு கியூரெக்சாக  பூசியே சீக்கிரம் முடிந்து போகும், விரல்களுக்கு பூசப்பட்ட சாந்துபொட்டும் அடுத்த  ஒரு மணி நேரத்தில் பட்டை பட்டையாக கழண்டு உரிந்து விடும். அப்போதெல்லாம் எங்களுக்கு சிரட்டைப்பொட்டுத்தான் உதவும். 
                                                படம் இணையத்திலிருந்து 
அதே போல்   கைவிரல்கலுக்கு மருதோன்றி இலைகளை தேடி அரைத்து விரலில்  பத்து போட்டுக்கொண்டு விரல் சிவந்து விட்டதா என  போட்ட மருதோன்றி பத்தை  தூக்கி தூக்கி பார்த்து விரல்களை தவிர உள்ளைங்கையிலும்  அதிகம் சிவந்து  அழுகை அழுகையா வர வைக்கும். மருதோன்றி  இலைகளை  அம்மியில் அரைத்தால் அதற்கும் அடி விழும், பயந்து பயந்து ஒழித்து மறைத்து அரைத்து  விரலில் ஒட்டிக்கொண்டு அதையும் மறைந்து விடலாம் என நம்பிய  காலங்கள் அவை.  

அரிசிக்குறுனையில் தான் அப்போதெல்லாம்   பொட்டுக்காய்ச்சுவார்கள், இப்போது சவ்வரியிலும் காய்ச்சுகின்றார்கள். அரிசிக்குறுணையை விட சவ்வரிசி விலை அதிகம் என்பதனால் பெரும்பாலும் அரிசிக்குறுணை தான் பொட்டுக்காய்ச்ச பயன் படும். வசதி இருப்போர் சவ்வரிசியிலும் காய்ச்சலாம்.சவ்வரிசிப்பொட்டு சற்று அதிக பசைத்தன்மையோடிருக்கும்.

பொட்டுக்காய்ச்சுவது எப்படி?

ஒரு கைப்பிடி சவ்வ்ரிசி அல்லது அரிசிக்குறுணையை  மண் சட்டியில் (மண் சட்டி கிடைக்காவிட்டால் வாணலியில் காய்ச்சலாம்.)   போட்டு அடுப்பை பற்ற வைத்து நிதானமாக மிதமான சூட்டில் வறுக்கும் போது குறுணை  முதலில் வறுபட்டு   நிறம் மாறி  தொடர்ந்து வறுக்க கறுப்புக்கலராகி நல்ல மைக்கறுப்பாகும் போது  அப்படியே திரண்டு   ஒன்றோடொன்று ஒட்டிக்கொள்ளும் பதத்தில்  ஒரு கப் தண்ணீரை விட்டு  கொதிக்கும் வரை காய்ச்ச வேண்டும். இதனுடன் சிறிது பர்வ்யூம் சேர்த்தால் . பொட்டு வாசனையாக இருக்கும், செவ்வரத்தம் பூவின் சாறு அல்லது தேங்காய் எண்ணெய் கொஞ்சம் விட்டு காய்ச்சினால் பொட்டு பளபளவென  இருக்கும். நாங்கள்தேங்காய் எண்ணெய்  ஒரு துளி விட்டுக்காய்ச்சுவோம். 

பொட்டுக்காய்ச்ச முன் காய்ச்சிய மையை ஊற்ற  தேங்காய்ச்சிரட்டையை இருபக்கமும் நல்லா வளவளப்பாக  பளீச் என சீவி தயார் செய்து கொள்வது முக்கியம். பொட்டுக்காய்ச்சியதும் அதை சிறு துணியினால் வடிகட்டி எடுத்தால்  சகடுகள் எல்லாம் தனியாகி  திக்காக இருக்கும்   மையை அதற்கென தயாராக இருக்கும் சிரட்டையில்    ஆப்பச்சட்டியில் மா ஊற்றி சுழட்டுவது போல் சிரட்டைக்குள் சுழற்றினால்    சிரட்டையில் பரவலாக ஒட்டும். எனினும் சிறிது நேரத்தில் கீழே வடிந்து நடுவில் சேரும். கவலை வேண்டாம். அப்படியே ஆற விட வேண்டும்.. பொட்டுக்காய்ச்சி ஆறவைத்து பதப்படுத்தும் பணி ஒரு நாளில் முடியாது என்பதை புரிந்து  பொறுமையாக 
காய்ச்சிய மையை  சிரட்டையில் ஊற்றி சுழட்டி  ஒரிடத்தில் அசைக்காமல் காய விட வேண்டும். இரண்டாம் மூன்றாம் நாளில்     மை சிரட்டையின் நடுவில்  தேங்கி  மேலே  பாலாடைபோல் படர்ந்து இருக்கும் அதை உடைத்து மீண்டும்   சில தடவை  சிரட்டைக்குள் பரவலாக படும்படி சுத்தி  காய வைக்க வேண்டும். இப்படி முழு மையும்,  சிரட்டையில் பரவலாக சம நிலைக்கு வரும் வரை  சிரட்டையை சுழற்றி காய விட்டால்  ஒரு வாரத்தில் மை இறுகி பொட்டுப்பதத்தில் வந்து விடும். 

அதில் ஒரு துளி நீர் விட்டு குழைந்தால் பொட்டு தயார். கடைகளில் வாங்கிப்பயன் படுத்தும் பொட்டுக்களில் இரசாயனங்களை சேர்த்து தோலுக்கு ஒவ்வாமை வரலாம். ஆனால் வீட்டில் இவ்வாறு காய்ச்சி பதப்படுத்தி பயன் படுத்தினால் வருடக்கணக்கில் அந்த பொட்டுச்சிரட்டை  குறைந்த செலவில் ஆரோக்கியமானதாகவும் நீண்டகால பயனுடனும் இருக்கும்,