29 அக்டோபர் 2016

எண்ணப்பறவை சிறகடித்து........!

நாங்கள் ஐந்து பெண்கள், ஒரு தம்பி! குடும்பம் பெருகிய பின் கஷ்ட ஜீவனம் தான்.வாடகையில்லாத வாடகை வீடு!
பண்டிகை காலத்தில் அம்மா எப்படியோ கஷ்டப்பட்டு மண்ணெண்ணை வாடையோடு வரும் சீத்தை துணி கல்முனைமார்க்கெட்டில் மொத்தமாக வாங்கி விடுவார்.
இரண்டு விதமான துணியில் கிறிஸ்மஸுக்கு ஒரு சட்டை புதுவருடத்துக்கு ஒரு சட்டை. ஐந்து பெண்களுக்கும் ஒரே துணி, டிசைன் மாறி இருக்கும், தம்பிக்கு மட்டும் ரெடிமேட் ரௌசரும், சேட்டும் அது அனேகமாய் தவிட்டு கலரில் பள்ளிக்கூட உடுப்பாயும் இருக்கும். வருடத்துக்கு அந்த இரண்டும் தான் எங்களுக்கு புது ஆடை.அப்பாவின் தங்கை கொழும்பில் இருந்து அவர் பெண்களின் சட்டைகளை கொடுத்து விடுவார். அந்த சட்டைகள் அளவுக்கேறப் எங்கள் அனைவருக்கும் மீதிக்காலத்துக்கு பகிரப்படும்.
அச்சு முறுக்கு சோகி என அந்த சூழலுக்கு ஏற்ப பலகாரமும் கட்லட்,அல்லது கூனி வடையோ செய்து அதை கொண்டு சொந்தக்காரர்கள் வீட்டுக்கு போனால் கைவிசேடம் தருவார்கள். ஒருரூபாய், மூன்று ரூபாய் என அவரவர் வசதிக்கு தகுந்த படி இருக்கும். அதனால் இந்த பலகாரம் காவி வேலைக்கு எங்களுக்குள் போட்டி இருக்கும். தம்பியை கூட்டிப்போனால் கொஞ்சம் கூடுதலாய் காசு தருவார்கள் என்பதனால் அன்று மட்டும் நான் நீ என அடிபடுவோம்! அவன் எங்கள் எல்லோருக்கும் செல்லப்பிள்ளையாய் இருந்தான்.
அம்மா இறைச்சி சமைத்தால் ஊருக்கே வாசனை வரும், அதிலும் மாமாவுக்கு அம்மாவின் கைச்சமையல் எனில் நிரம்ப பிடிக்கும், வீட்டில் விருந்துச்சாப்பாடு. அதான் ஆட்டுஇறைச்சிக்கறி சமைத்து மாமா வீட்டுக்கு கொண்டு போனால் மாமி ஐந்து ரூபா தருவார்! அதனால் அன்று மட்டும் உளவாரம் அதாங்க உபகாரம் எனும் கைவிசேடக்காசு சிரித்துக்கொண்டே மாமாவும் தருவார்!மற்ற நாளில் மாமா என்றாலே பயம் தான்!
அன்று இருட்டிய பின் கல்முனையிலிருந்து பாபூஜி ஐஸ்கிரிம் வண்டி ஸ்பீக்கர் சத்தத்தோட வரும். ஊர் எல்லையில் வரும் போதே அதன் சத்தம் கேட்கும், பாட்டும் லைட்டுமாய் வரும் வண்டிக்கு பின்னால் தெருவின் ஆரம்பத்திலிருந்து முடிவு வரை ஓடுவோம்.
அப்பா வீட்டில் இருந்தால் தான் ஐஸ்கிரிம் கிடைக்கும்.அப்போதானே காசும் வீட்டில் இருக்கும்.அப்பா இல்லாத நாளில் ஐஸ்கிரிம் வண்டி வந்தால் வண்டியை ஏக்கத்தோடு பார்த்துக்கொண்டே நிற்போம்!
இன்றைக்கு மாதத்துக்கு நான்கு தடவை புதுத்துணி எடுத்தாலும் அக்காலத்தில் பண்டிகை எனில் அதிகாலையில் தலைக்கு குளித்து சீத்தைத்துணி சட்டையை மகிழ்ச்சியோடு அணிந்து சர்ச்சுக்கு போய் வந்து பலகாரங்கள் சாப்பிட்டதை போல் சுவையாய் இல்லை.
வயிறு நிறைய சாப்பிட தின்பண்டம் இருக்கின்றது.கப்பேர்ட் நிறைந்த துணிகள் இருக்கின்றது. ஆனாலும் எதையோ இழந்தது போல் உணர்வும் மனதில் ஆழத்தில் உறங்கிக்கொண்டே இருக்கின்றது!

தொடர்வேன்!
அனைவருக்கும் 
இனிய தீபத்திருநாள் 
நல் வாழ்த்துகள்! 

7 கருத்துகள்:

  1. தீப ஒளித் திருநாள் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. //இன்றைக்கு மாதத்துக்கு நான்கு தடவை புதுத்துணி எடுத்தாலும் அக்காலத்தில் பண்டிகை எனில் அதிகாலையில் தலைக்கு குளித்து சீத்தைத்துணி சட்டையை மகிழ்ச்சியோடு அணிந்து சர்ச்சுக்கு போய் வந்து பலகாரங்கள் சாப்பிட்டதை போல் சுவையாய் இல்லை//

    இது உங்களுக்கு மட்டுமல்ல பலரின் வாழ்க்கை இப்படித்தான்.
    தங்களுக்கும் தீபாவளி வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  3. well there are millions of people who share yopur feeling ji

    பதிலளிநீக்கு
  4. வாழ்க்கையைப் பேசுது....
    தொடருங்கள் அக்கா...
    உங்கள் எதார்த்த எழுத்தின் பின்னே பயணிக்கிறோம்...
    தீபாவளி வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  5. இன்றைக்கு மாதத்துக்கு நான்கு தடவை புதுத்துணி எடுத்தாலும் அக்காலத்தில் பண்டிகை எனில் அதிகாலையில் தலைக்கு குளித்து சீத்தைத்துணி சட்டையை மகிழ்ச்சியோடு அணிந்து சர்ச்சுக்கு போய் வந்து பலகாரங்கள் சாப்பிட்டதை போல் சுவையாய் இல்லை.
    வயிறு நிறைய சாப்பிட தின்பண்டம் இருக்கின்றது.கப்பேர்ட் நிறைந்த துணிகள் இருக்கின்றது. ஆனாலும் எதையோ இழந்தது போல் உணர்வும் மனதில் ஆழத்தில் உறங்கிக்கொண்டே இருக்கின்றது!//

    ஆம் நிழா சகோ/நிஷா எங்களுக்கும் இதே நினைவுகள் உண்டு. சிறு வயதில் பல கஷ்டங்கள். நமக்கு மட்டுமல்ல பலருக்கும் இதெ போன்றுதான்....உங்கள் வாழ்க்கைப் பயணத்தை நாங்களும் தொடர்கின்றோம்

    பதிலளிநீக்கு
  6. சிறு வயதில் கஷ்டப்பாட்டாலும் அப்போது இருந்த சந்தோஷம் இப்போது இல்லவே இல்லை

    பதிலளிநீக்கு
  7. நினைவுகள்....

    அப்போதைய மகிழ்ச்சி இப்போது இருப்பதில்லை. பல பண்டிகைகள் நான் கொண்டாடுவதே இல்லை!

    பதிலளிநீக்கு

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!