23 நவம்பர் 2015

நாணும் அச்சமும் நாய்கட்டு வேண்டுமாம்! பாரதியார் சொன்னதென்ன?

பெண் சுதந்திரம் என்றால் எப்படிப்பட்டதாயிருக்க வேண்டும் என பாரதியார் கூறினார்?

அன்றையகாலகட்டத்தில்அதாவதுபாரதியார்வாழ்ந்தகாலகட்டத்தில் பெண்கள்அடக்கியாளப்பட்டார்கள்.அடிமைகளாக நடத்தப்பட்டார்கள். வீட்டுக்குள் அடக்கி வைக்கப்பட்டார்கள். உடன்கட்டை ஏற கட்டாயப் படுத்தப்பட்டார்கள், பால்ய விவாகத்துக்குட்படுத்தபட்டார்கள், அப்படிப்பட்ட சூழலில் அவர்களை தட்டியெழுப்ப பாரதியார் பல புரட்சிகர பாடல்களை இயற்றியதோடன்றி அவர் மகள் தங்கம்மா தைரியமான வீரமகளாக வாழவேண்டும் என்றே விரும்பினார்,அதையே தன் மனவெளிப்பாடாக அவர் வெளிப்படுத்தி இருப்பதினை கீழே வரும் பாடல்களை உணர்ந்து, கருத்தோடு படித்து பார்த்தால் புரிந்திடலாம் 

இன்றைய பெண்கள் அவர் விரும்பிய இலக்கினை அடைந்தோமா என தம்மைத்தாமே ஆராய்ந்திடலாம் 

அச்சம்,மடம்,நாணம்,பயிர்ப்பு எனும் நாற்குணம் கொண்டு பெண்களை அடக்கி ஆள முன் இந்த நான்கு குணங்கள் குறித்தும் பாரதியாய் சொன்னதென்ன என பார்ப்போமா?

மாதர்க்கு ண்டு சுதந்திரம் என்று
நின் வண்ம லர்த்திரு வாயின் மொழிந்தசொல் 
நாதந் தானது நாரதர் வீணையோ? 
நம்பிரான் கண்ணன் வேய்ங்குழ லின்பமோ?
வேதம் பொன்னுருக் கன்னிகை யாகியே 
மேன்மை செய்தெமைக் காத்திடச் சொல்வதொ?
சாதல் மூத்தல் கெடுக்கும் அமிழ்தமொ? 
தையல் வாழ்கபல் லாண்டுபல் லாண்டிங்கே! 

அறிவு கொண்ட மனித வுயிர்களை 
அடிமையாக்க முயல்பவர் பித்தராம்; 
நெறிகள் யாவினும் மேம்பட்டு மானிடர் நேர்மை 
கொண்டுயர் தேவர்க ளாதற்கே, 
சிறிய தொண்டுகள் தீர்த்தடி மைச்சுருள் தீயிலிட்டுப் 
பொசுக்கிட வேண்டுமாம்;
நறிய பொன்மலர் மென்சிறு வாயினால்
நங்கை கூறும் நவீனங்கள் கேட்டிரோ!

ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால் 
அறிவி லோங்கிஇவ் வையம் தழைக்குமாம்
பூணு நல்லறத் தோடிங்குப் பெண்ணுருப் 
போந்து நிற்பது தாய்சிவ சக்தியாம்;
நாணும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம்
ஞான நல்லறம் வீர சுதந்திரம் 
பேணு நற்குடிப் பெண்ணின் குணங்களாம்; 
பெண்மைத் தெய்வத்தின் பேச்சுகள் கேட்டீரோ! 

நாணமும் அச்சமும் என்று சொல்லியிருக்கிறாரா அல்லது நாணும் அச்சமும் என்று சொல்லியிருக்கிறாரா?இதன் முழுமையான அர்த்தத்தினை நாம் புரிந்திருக்கின்றோமா?

நாணுமா?நாணமா? இவ்வரிகள் மூலம் என்ன சொல்ல வருகின்றார் பாரதியார்?நாணம் எனில்வெட்கம் என இப்பாடல் சொல்கின்றதா? 

நாணம் என்றால் என்னவென குறள் சொல்வதை பார்த்தோமானால்... 

பேணாது பெண்விழைவான் ஆக்கம் பெரியதோர்
நாணாக நாணுத் தரும்

தனக்கான கடமையை செய்யாமல் பெண்ணை நாடி அவள் பின்னால் திரிபவனுடைய நிலை வெட்கித் தலைகுனிய வேண்டியதாக ஆகிவிடும்.

நாணும் என்பது இங்கே மரியாதைக்குரிய பாரட்டத்தக்க விதத்தில் சொல்லப்படாமல் தலைகுனிய வேண்டிய ஒரு சொல்லாக கணிக்கப்படுவதைக்கவனித்தால் நாணும் அதாவது தலைகுனிந்து நிற்கத்தக்க செயலும் அச்சமும் பெண்களுக்கு வேண்டியதல்ல நாய்களுக்குரியதே என பாரதியார் சொன்னதாக கொள்ளலாம்

அப்படியெனில் பெண்களுக்கு வெட்கம் வேண்டியதில்லை என பாரதியார் சொல்கின்றார் என எடுத்து கொள்ளலாமா?

நிலத்தின் தன்மை பயிர்க்குள தாகுமாம்; 
நீசத் தொண்டு மடமையும் கொண்டதாய் தலத்தில் 
மாண்புயர் மக்களைப் பெற்றிடல் சாலவே யரி 
தாவதொர் செய்தியாம்; 

குலத்து மாதர்குக் கற்பியல் பாகுமாம்; 
கொடுமை செய்தும் அறிவை யழித்துமந் நலத்தைக் 
காக்க விரும்புதல் தீமையாம்;
நங்கை கூறும் வியப்புகள் கேட்டீரோ! 

ஞான நல்லறம் என தன் ஞானத்தினால் தன் வீட்டை நடத்தி தன் பிள்ளைகளை நற்பழக்கவழக்களுடையவர்களாய் கற்பித்து எதிர்கால சந்ததியை திறம்பட உருவாக்கும் நல்ல குடிப்பெண்ணாய் இருப்பவளிடம் நாணமும் இருக்கும்.ஆனாலும் அவள் நாணும் படியாய் இருக்காது!

தெருவுக்கு தெரு மாதர் சங்கங்களை உருவாக்கி நாட்டை மாற்றுகின்றோம் சமூக சேவை செய்கின்றோம் என தம் சொந்த குடும்பத்தினை கவனிக்காது  ஊருக்கும் உலகுக்கும் சேவையாற்றுதல் பெண் சுதந்திரமாகுமா? நம் பிள்ளைகளை காவாலிகளாக விட்டு விட்டு ஊரை திருத்த புறப்படுதல் பெண் சுதந்திரமாகுமா? 

புதுமைப் பெண்ணிவள் சொற்களும் செய்கையும் 
பொய்ம்மை கொண்ட கலிக்குப் புதிதன்றிச் சதுமறைப்படி 
மாந்தர் இருந்தநாள் தன்னி லேபொது வான் வழக்கமாம்; 
மதுரத் தேமொழி மங்கையர் உண்மைதேர் 
மாத வப்பெரி யோருட னொப்புற்றே 
முதுமைக் காலத்தில் வேதங்கள் பேசிய முறைமை
மாறிடக் கேடு விளைந்ததாம். 

நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும், 
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும், 
திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால் 
செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்; 

புதுமைபெண்கள் என கூறிக்கொண்டு வீட்டையும் குடும்பத்தினையும் கவனிக்காது  பொய் பேசித்திரிவதெல்லாம் பெண் சுதந்திரமாகுமா? ஆணவமும், செருக்கும்,  யாருக்கும் பயப்படாத தன்மையும் என்றுமே பெண் சுதந்திரமாகாது என எத்தனை அழகாக சொல்கின்றார். 

அப்படி எனில் எது தான் பெண் சுதந்திரம்? 

பெண் சுதந்திரம் எப்படி இருக்க வேண்டும் என பாரதியார் சொல்வதை கேளுங்கள்!
அமிழ்ந்து பேரிரு ளாமறி யாமையில் 
அவல மெய்திக் கலையின்றி வாழ்வதை 
உமிழ்ந்து தள்ளுதல் பெண்ணற மாகுமாம் 
உதய கன்னி உரைப்பது கேட்டீரோ!

உலக வாழ்க்கையின் நுட்பங்கள் தேரவும், 
ஓது பற்பல நூல்வகை கற்கவும், 
இலகு சீருடை நாற்றிசை நாடுகள் 
யாவுஞ் சென்று புதுமை கொணர்ந்திங்கே
திலக வாணுத லார்நங்கள் 
பாரத தேசமோங்க உழைத்திடல் வேண்டுமாம்; 
விலகி வீட்டிலோர் பொந்தில் வளர்வதை 
வீரப் பெண்கள் விரைவில் ஒழிப்பாராம். 

சாத்தி ரங்கள் பலபல கற்பாராம்; 
சவுரி யங்கள் பலபல செய்வராம்; 
மூத்த பொய்ம்மைகள் யாவும் அழிப்பராம்; 
மூடக் கட்டுக்கள் யாவுந் தகர்ப்பராம்; 
காத்து மானிடர் செய்கை யனைத்தையும் 
கடவு ளர்க்கினி தாகச் சமைப்பராம்; 
ஏத்தி ஆண்மக்கள் போற்றிட வாழ்வராம்; 

இளைய நங்கையின் எண்ணங்கள் கேட்டீரோ?

பெண் சுதந்திரம் என்றால் என்ன என இதை விடயாராலும்விளக்கிட இயலுமா என எனக்கு தெரியவில்லை. ஆனால் தன் வாழ்க்கையை சரியாக புரிந்து இதன்படி தம்மை தம் அறிவை வளர்த்து கொண்டோராய் இருக்கும் பெண்களை விரல் விட்டே எண்ணி விடலாம்.

கற்றல் என்பதை வெறும் பள்ளிப்படமாகவும்,தம்எதிர்கால
சம்பாத்தியத்துக் குரியதாகவும் மட்டும் நினைத்து கற்போராய் இருக்கின்றோம். உலக அறிவில் இன்னும் இன்னும் வளர வேண்டியவர்களாக இருக்கின்றோம்.

கல்பனாசாவ்லாவையும்,பி.டிஉஷாவையும், சானியாவையும் சாதனைப்பெண்ணாக காட்டும் நாம் நம்மை அததனை உயரத்துக்கு வளர்த்திட முடியாவிட்டாலும் மூட நம்பிக்கைகளில் மூழ்கிடாமல் அனைத்தினையும் அறிவியல் நோக்கோடு ஆராய்ந்தறிந்து  நம் அறியாமையை நீக்கி அறிவில்சிறந்து நம்மையும் நம் சந்ததியையும் உயர்த்திட முடியாதது ஏன்?

இணையத்திலும் பல பெண்கள் எழுதுகின்றோம், அதிலும் பல கட்டுப்பாடுகள் வைத்து சமையலும், அழகுக்கலையும், அரட்டைக்கும், கவிதைகள் எழுதவும் தான் பெண்களால் முடியும் பெண் என்றால் இப்படித்தான் எனும் வரையைறையை வகுத்து அதனுள் நடக்கும் படி நம்மை நாம் ஏன் அடிமைப்படுத்த வேண்டும்.  நமக்கான் உலகம் விசாலமாய் நம் அறிவை வளர்ப்பதற்கு ஏதுவாய்  இருக்கும் போது   நம்மையே நாம் ஏன் ஒரு பொந்தினுள் அடக்கிட வேண்டும். 

இங்கே நான் பல பெண்களைபார்க்கின்றேன்,அழகாகஇருப்பார்கள், காலேஜ் முடித்து பட்டம் பெற்றிருப்பார்கள், தம்மை அழகு படுத்திட காட்டும் ஆர்வத்தினை  அறிவை வளர்த்திட காட்டுவதில்லை. கிணற்று தவளைகளாக வேலைக்கு போனாலும் தம் வேலை சார் துறை தவிர்த்து வேறேதும் அறியாதோராக இருக்கின்றார்கள். கணவரை சார்ந்தே வாழ்வதால் கணவருக்கு தீடிர் உடல் நலமின்மை  அல்லது இழப்புகள் ஏற்படும் போது கையறு நிலைக்கு தள்ளப்பட்டு தவிர்த்து போகின்றார்கள். தம் அன்றாட வீட்டு நிர்வாகம்,வரவு செலவு  குறித்து கூட அறியாதோராய் இருக்கின்றார்கள். 

 நான் அனைவரையும் சொல்லவில்லை.  பெரும்பாலானோர் இப்படி இருப்பதை காணும் போது  வருந்துகின்றேன் உலகம் இத்தனை மாறினால் என்ன?சுதந்திரம் எஞும் போர்வையில் தடம் மாறாமல் பெண்ணானவள் வாழ்க்கையில் செல்ல வேண்டிய தூரம் அதிகம் தான். 

சிந்திப்போம் செயல் படுவோம்!

உங்கள் குட்டுக்களையும் தட்டுக்களையும் தயங்காது பதிவாக்குங்கள் நட்பூக்களே!

16 கருத்துகள்:


  1. இங்கே நான் பல பெண்களை பார்கின்றேன்,அழகாக இருப்பார்கள், காலேஜ் முடித்து பட்டம் பெற்றிருப்பார்கள், தம்மை அழகு படுத்திட காட்டும் ஆர்வத்தினை அறிவை வளர்த்திட காட்டுவதில்லை. கிணற்று தவளைகளாக வேலைக்கு போனாலும் தம் வேலை சார் துறை தவிர்த்து வேறேதும் அறியாதோராக இருக்கின்றார்கள். //

    ஆதங்கத்தில் விளைந்த அற்புதமான பதிவு
    நீங்கள் குறிப்பிடுவது போல மாற்றம்
    பெண்கள் மத்தியில் நிச்சயம் வேண்டும்
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. உங்கள் குட்டுக்களையும் தட்டுக்களையும் தயங்காது பதிவாக்குங்கள் நட்பூக்களே என்று கேட்டதால் என் மனதில் பட்டதை சொல்லுகிறேன்,

    முதலில் தட்டிக் கொடுக்கிறேன்.
    பதிவில் நீங்கள் சொல்லிய விஷயங்கள் அருமை...பாராட்டுக்கள் மேலும் எழுத்துகளை சரியான அளவில் மாற்றி வெளியிட்டதற்கு மிகவும் நன்றி,


    இப்போது உங்காள் தலையில் நல்லாவே கொட்டுகிறேன் கிழே நான் சொல்லும் காரணங்களுக்காக

    முதலில் பதிவு மிக நீளமாக இருக்கிறது இனிமேல் பதிவு எழுதும் போது அளவை முடிந்த வரையில் குறைக்கப்பாருங்கள்...


    என்னைப் பொருத்த வரையில் இந்த பதிவில் வந்த கடைசி மூன்று பாராமட்டுமே இந்த பதிவிற்கு போதும் என்பேன், இது எனது கருத்து ஆனால் நீங்களும் மற்றவர்களும் எனது இந்த கருத்திற்கு உடன்பட வேண்டும் என்பது அவசியம் இல்லை உங்கள் கருத்துக்கள் மிக சரியாக இருக்கலாம்

    தொடர்ந்து எழுதுங்கள் நேரம் கிடைக்கும் போதெல்லாம் தொடர்கிறேன்

    பதிலளிநீக்கு
  3. ஒவ்வொன்றையும் படிப்படியாக அருமையாக சொல்லியுள்ளீர்கள்... வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  4. அருமையான ஒரு கட்டுரை பாரதி கண்ட புதுமைப்பெண்ணாக எங்கள் அக்கா திகழ்வது போன்று அனைத்து மங்கையரும் சாதனைகள் பல புரிந்து பாரினில் வெற்றி கண்டு தன்னையும் தான் சார்ந்த சமூகத்தையும் முன்னெடுத்துச்செல்ல வாழ்த்தி மகிழ்கிறேன்

    சிறந்த பொதுநலச்சிந்தனைக்கு வாழ்த்துக்கள் அக்கா

    மங்கையர் திலகமே வாழ்க இன்னும் மங்கையரின் விடிவுக்காய் பாடுபட சேனையில் இன்னும் இது போன்ற மங்கையர் பல வந்து இது போன்ற விழிப்புணர்வுக் கட்டுரைகள் தொடர்ந்து தந்துகொண்டே இருக்கு எனது அன்பு அழைப்பதிதலும் வாழ்த்துக்களும்

    நன்றியுடன் நண்பன்

    பதிலளிநீக்கு
  5. இக்காலப் பெண்கள் பாரதி கூறிய வழி மறந்து தான் நினைத்ததுதான் சுதந்திரம் என்று இச்சைகளுக்கு அடிபணிந்து வாழப் பழகிவிட்டார்கள் ஆதலினால் பெண் அவலம் அதிகம் காண முடிகிறது இந்தியா இலங்கை போன்ற எம் நாடுகளில் மேலைத்தேய கலாச்சாரம் அதிகரித்து பப்பும் மப்புமாய் பெண்கள் அலைகிறார்கள் ஆனால் மேலைத்தேய பெண்கள் மாறிவருகிறார்கள் என்பது கண்கூடு அருமையான கட்டுரை பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  6. குட்டுகள் இல்லை,தட்டுகள்தான்;நானும் பலகாலமாக இப்பாடலைப் படித்திருக்கிறேன்.இன்றே அருமையான விளக்கம் கிடைத்தது,புதுமைப் பெண்ணே!

    பதிலளிநீக்கு
  7. //தம்மை அழகு படுத்திட காட்டும் ஆர்வத்தினை அறிவை வளர்த்திட காட்டுவதில்லை//

    அருமையான பஞ்ச் இதைவிட எடுத்துக்காட்டு வேறில்லை அழகான பாரதியின் பாடல்களோடு தொகுத்த விதம் நன்று

    இதற்க்கு மேல் எனக்கு விமர்சிக்க தகுதி இல்லையென ‘’நானும் அச்சமுடன் தலை குனிகின்றேன்’’ தொடர... வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  8. வணக்கம்

    சிறப்பான விளக்கம் கொடுத்துள்ளீர்கள்... பாடலுடன்... தலையில் அறைந்தால் போல் இருக்கிறது... சரியான சாட்டையடி...வாழ்த்துக்கள்....இதைப்போல பல பதிவுகள் எழுதுங்கள்...
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  9. அருமையாகச் சொல்லி இருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
  10. உள்ளதை உள்ளபடி...
    பாரதியின் பாடலுடன்...
    மிக அழகாக... அருமையாக... விளக்கமாக சொல்லியிருக்கிறீர்கள் அக்கா...

    //இணையத்திலும் பல பெண்கள் எழுதுகின்றோம், அதிலும் பல கட்டுப்பாடுகள் வைத்து சமையலும், அழகுக்கலையும், அரட்டைக்கும், கவிதைகள் எழுதவும் தான் பெண்களால் முடியும் பெண் என்றால் இப்படித்தான் எனும் வரையைறையை வகுத்து அதனுள் நடக்கும் படி நம்மை நாம் ஏன் அடிமைப்படுத்த வேண்டும். நமக்கான் உலகம் விசாலமாய் நம் அறிவை வளர்ப்பதற்கு ஏதுவாய் இருக்கும் போது நம்மையே நாம் ஏன் ஒரு பொந்தினுள் அடக்கிட வேண்டும். ///

    இணையத்தில் நிறையப் பெண்கள் சிறப்பாக எழுதுகிறார்கள் அக்கா...

    சமையல், அரட்டை என்ற கட்டுப்பாட்டை விடுத்து திறமையாளர்கள் பலர் ஜொலிக்கிறார்கள்... தங்களைப் போல...

    நல்ல கட்டுரைப் பகிர்வு அக்கா...

    பதிலளிநீக்கு
  11. நல்ல கட்டுரை நிஷா....சகோ! அழகான தமிழில் அழகாகச் சொல்லியிருக்கின்றீர்கள்...

    பதிலளிநீக்கு
  12. நல்ல பதிவு. அருமையான விளக்கமும் கூட.

    பதிலளிநீக்கு
  13. கற்றல் என்பதை வெறும் பள்ளிப்படமாகவும்,தம்எதிர்கால

    சம்பாத்தியத்துக் குரியதாகவும் மட்டும் நினைத்து கற்போராய் இருக்கின்றோம். உலக அறிவில் இன்னும் இன்னும் வளர வேண்டியவர்களாக இருக்கின்றோம்.
    #எதிர்காலம் நோக்கி கேள்வி எழுப்பும் வரிகள்

    பதிலளிநீக்கு
  14. ம்ம்ம்...நல்லபதிவு எனச்சொல்லிவிட்டு போய்விடலாம் தான்..ஆனால் எம் ஞானத்தகப்பன் பாரதியின் வரிகளில் இழுத்து வரப்பட்டிருக்கிறேன்...நாணம்,நாணும்..நல்ல அலசல்...தாலாட்டுப்பாடாத கவிஞன் பெண்ணுக்கு பாடியதில் அளவில்லா புகழ் பெற்றவன்...ஓடி விளையாடு பாப்பா என்றவன் ..மோதி மிதித்திடவும்,காரி உமிழ்ந்திடவும் கற்றுத்தந்த கலகக்காரன்..

    ஆனால்...பெற்ற சுதந்திரம் என்னவானது..இத்தனை பெண்களில் ஒரு கல்பனா சாவ்லாதான்....ஏன் அளவுக்கு மீறிய சுதந்திர ஆர்வம்...எதிலும் கொள்ளும் ஆதிக்கப்பார்வை...எப்போதும் ஆணாதிக்கம் எனும் வறட்டுக்கூச்சல்...உடைகளில் மீறிய ஆபாசம்...
    இதை நான் சொன்னால்...?
    நீங்கள் சொன்னதில் உடன்படுகிறேன்..
    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  15. நாணும் அச்சமும் என்பதில் இவ்வளவு ஆராய்ச்சியா?
    நாண் என்பதே சொல். (நாணுடைமை) அம் சாரியை (அர்த்தமிழந்த அழகுக்காகச் சேர்க்கப்படும் சொல்) நாண்+அம் நாணம் அவ்வளவே. எனினும் உங்கள் ஆய்வையும் அதற்கு அடிப்படையான தமிழ்ச்சமூகத் தோய்வையும் பார்த்து மகிழ்ந்தேன். இன்று பெண்விடுதலை வந்துவிட்டது என்பதெல்லாம் மிகையான கற்பனையே. இங்கொன்றும் அங்கொன்றும் வருவதல்ல விடுதலை! அண்மை அமெரிக்கத் தேர்தல்வரை வராத விடுதலை, அப்படி இப்படி வந்துவிட்டதாக நினைக்க வேண்டாம். அதற்கு இன்னும் வெகுதூரம் பயணிக்க வேண்டும்ம்ா. எனினும் உங்கள் ஆய்வுகள் அவ்வப்போது தொடர வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா! பெண்கள் விடுதலை அடைய பெண்களே விடமாட்டேங்கறாங்க ஐயா! இதில் எங்கே இருந்து பெண் விடுதலை வரும். வரவில்லை என தான் நானும் சொல்கின்றேன்.மாதர் சங்கமெனும் பெயரில் கிளப்புகளில் கூடியும் தெருவுக்கு வந்து கோசமிடுவதும் பெண் விடுதலை அல்ல என்பது தான் என் புரிதல்.தன்னிலிருந்து முதலில் விடுதலை அடையவே இல்லை பெண் இனம்,அமெரிக்க தேர்தல் நிலையும் அப்படித்தான்.கிளிண்டனுக்கு வாய்ப்பிருந்தால் கில்லாரிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்காது. வானுயரப்பறந்தாலும் சிறகொடியும் பறவையாய் தான் பல நேரம் பெண்ணுக்குள் பெண்ணே எதிரும் புதிருமாய் இருக்கின்றாள். அவள் எதிர்த்து போராட வேண்டியது ஆண்களை அல்லஎன்பதும் என் புரிதல் தான்.

      நீக்கு

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!